மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியக் கைதி நாகேந்திரன் தர்மலிங்கத்திற்குக், குடியரசு தலைவர் மன்னிப்பு வழங்க வேண்டுமென, சிங்கப்பூர் மன்னிப்பு வாரியத்தின் விருப்புரிமையை மலேசியா நாடியது.
சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிப்பதாகவும், அந்நாட்டு அதிகாரிகளின் முடிவுக்காக இன்னும் காத்திருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் சைஃபுட்டின் அப்துல்லா கூறினார்.
“இந்த விஷயத்தில் நான் மீண்டும் சொல்ல வேண்டும், ஒரு கடிதம் அனுப்பி நாங்கள் எங்கள் வழியில் விண்ணப்பிக்கலாம், ஆனால் சிங்கப்பூரில் விவகாரங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளில் தலையிட முடியாது,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு அவர் அனுப்பியக் கடிதம் குறித்து கேட்டதற்கு, இதுவரை தனக்கு பதில் வரவில்லை என்று சைஃபுட்டின் கூறினார்.
ஏப்ரல் 22, 2009-இல் 42.72 கிராம் டைமார்ஃபின் கடத்தியதற்காக, சிங்கப்பூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நாகேந்திரனுக்கு, சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் நவம்பர் 22, 2010 அன்று மரண தண்டனை விதித்தது.
நீதிமன்றத்தின் ஊடாக மேன்முறையீடு செய்யும் நடவடிக்கை, ஏற்கனவே நாகேந்திரனின் குடும்ப வழக்கறிஞரால், குடியரசு தலைவரின் மன்னிப்பு விண்ணப்பத்தின் மூலம் இறுதிக் கட்டம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், விண்ணப்பம் ஜூன் 1, 2020 அன்று நிராகரிக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை, சைஃபுட்டின் ஓர் அறிக்கையில், சிங்கப்பூரில் உள்ள மலேசிய உயர் ஆணையம் மூலம் வெளியுறவு அமைச்சு வழக்கின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தகுந்த தூதரக உதவிகளை வழங்கியதாகவும் கூறினார்.
- பெர்னாமா