நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் தூக்கு தண்டனையை ஒத்தி வைக்க சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக, புதன்கிழமை (நவம்பர் 10) தூக்கிலிடப்படவுள்ள நிலையில், மலேசியக் குடிமகனான நாகேந்திரன் சாங்கி சிறையில் வாடுகிறார்.
தண்டனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அரசியலமைப்பு திருத்தம் இன்று இயங்கலையில் விசாரிக்கப்பட்டது.
விசாரணையில், அறிவுசார் குறைபாடுள்ள ஒருவரைத் தூக்கிலிடுவது சட்ட விரோதமானது என்ற வாதத்தைப் பொறுத்து, அவரது வழக்கறிஞர்கள் மரண தண்டனையைச் சவால் செய்தனர்.
சிங்கப்பூரில் உள்ள நாகேந்திரனின் வழக்கறிஞர் எம் ரவி இந்த முடிவை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
“நல்ல செய்தி.
“உயர்நீதிமன்றத்தின் (சிங்கப்பூர்) தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், மரணதண்டனையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,” என்று அவர் எழுதினார்.
நீதித்துறை மறுஆய்வை உயர்நீதிமன்றம் நிராகரித்ததாகவும் ஆனால் மேல்முறையீட்டு மனுவை அனுமதித்ததாகவும் ரவி பின்னர் தெளிவுபடுத்தினார்.
மேல்முறையீட்டு நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிவெடுக்கும் வரை, மரணதண்டனைக்குத் தடை விதிக்கப்படும்.
இதற்கிடையில், மலேசியாவில் உள்ள நாகேந்திரனின் வழக்கறிஞர் என் சுரேந்திரன் இந்த முடிவு தனக்கு நிம்மதி அளிப்பதாகக் கூறினார்.
“இது ஒரு பெரிய நிம்மதி.
“மதியம் 2 மணி முதல் சிங்கப்பூர் ஹோட்டலில் தொலைபேசியில் காத்திருந்த அவரது சகோதரர் நவின்குமார் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கூறினார்
“இது மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்களின் அசாதாரண முயற்சியாகும்,” என்று அவர் கூறினார்.
42.7 கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்ததற்காக 2009-ஆம் ஆண்டு நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.