சாங்கி – கே.எல்.ஐ.ஏ. இடையே தடுப்பூசி பயண வழி

மலேசியாவும் சிங்கப்பூரும் 29 நவம்பர் 2021 முதல், சாங்கி விமான நிலையம் மற்றும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (கே.எல்.ஐ.ஏ.) இடையே ‘தடுப்பூசி பயண வழி’யை (விதிஎல்) தொடங்கும்.

திங்களன்று, இரு தலைவர்களும் தொலைபேசியில் கலந்துரையாடிய பின்னர், மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரின் கூட்டறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விதிஎல்-இன் கீழ், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள், மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே பயணம் செய்யலாம். மேலும், அவர்கள் கோவிட்-19 சோதனையில் தேர்ச்சி பெற்றால் தனிமைப்படுத்தல் அல்லது இல்லமிருத்தல் அறிவிப்பு (எஸ்.எச்.என்.) ஆகியவற்றைச் செய்ய வேண்டியதில்லை.

இரண்டு பிரதமர்களும் விரைவில் எல்லை கடந்த நிலவழி பயணத்தை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

அந்த அறிக்கையில், இஸ்மாயில் சப்ரி கூறுகையில், நீண்டகாலமாக நிறுவப்பட்ட மலேசியா-சிங்கப்பூர் ஒத்துழைப்பில் விதிஎல் மற்றொரு முக்கியமான சாதனை என்றார்.

கோவிட் -19 தொற்றிலிருந்து தங்கள் குடிமக்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் அதே வேளையில், பொருளாதாரத்தைப் புதுப்பிக்க வேண்டிய அவசியத்தைச் சமநிலைப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளும் படிப்படியாக தங்கள் எல்லைகளை மீண்டும் திறக்கும் போது விதிஎல் பயணத்தைச் செயல்படுத்தும்.

இதற்கிடையில், “மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்கு முன்னர் நாங்கள் உருவாக்கியதைச் சேர்த்து, இந்தப் பயணத் திட்டத்தின் மூலம் திறம்பட செயல்படுத்தப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.” லீ கூறினார்;

“எங்கள் இரு நாடுகளும் இறுதியாக விதிஎல் வழியாக மீண்டும் எல்லை தாண்டிய பயணத்தைத் தொடங்க முடியும் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், மக்களிடையேயான உறவுகளை மீட்டெடுக்கவும், நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உதவும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இரண்டு விமான நிலையங்களுக்கும் இடையே தினமும் ஆறு திட்டமிடப்பட்ட விமானங்களுடன் விதிஎல் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்குள் நுழைய, பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எதிர்மறையான பாலிமரேஸ் செயின் ரியாக்‌ஷன் (பிசிஆர்) சோதனை முடிவு அல்லது தொழில் ரீதியாக தயாரிக்கப்பட்ட ராபிட் அந்திஜன் தெஸ்ட் (ஏ.ஆர்.தி.) முடிவைக் காட்ட வேண்டும் என்றும், வந்தவுடன் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஈஸ்வரன் கூறினார்.

மலேசியாவுடனான விதிஎல் விண்ணப்பங்கள் நவம்பர் 22-ஆம் தேதி திறக்கப்படும், திறக்கும் தேதி நெருங்கும் போது சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூடுதல் விவரங்களை வழங்கும் என்று அமைச்சர் கூறினார்.

“கோவிட்டுக்கு முன், கோலாலம்பூர்-சிங்கப்பூர் சர்வதேச விமானப் பாதை உலகிலேயே மிகவும் பரபரப்பான ஒன்றாக இருந்தது, ஒரு நாளைக்கு சுமார் 40 விமானங்கள் மற்றும் சராசரியாக 7,000 வருகைகள் சாங்கி விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு நடைபெறும்,” என்று ஈஸ்வரன் கூறினார்.

சிங்கப்பூர் தற்போது விதிஎல் திட்டங்களைக் கொண்டுள்ள 13 நாடுகளில் இருந்து வருகை தருவதற்காக தினசரி 4,000 பயணிகளின் ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ளது என்று ஈஸ்வரன் கூறினார்.

“பயணத்தின் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல் இருவழி தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்தை எளிதாக்குவதற்காக இது உருவாக்கப்பட்டது. எனவே, தற்போதுள்ள விதிகளுக்கு மாற்று என்பதைவிட, இது கூடுதலாகும்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா