ஒப்பந்த மருத்துவர்கள் : எல்லோரையும் ஏற்க முடியுமா என்று தெரியவில்லை – கே.ஜே.

நாடாளுமன்றம் l நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டிய மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்த திட்டப்பணியைச் சுகாதார அமைச்சு தற்போது தயாரித்து வருகிறது.

எதிர்காலத்தில் தேவைக்கேற்ப நியமனம் செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக, பொது சேவைத் துறை (ஜேபிஏ) மற்றும் நிதி அமைச்சிடம் இந்தத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

“ஒப்பந்தத்தின் கீழ் உள்ள அனைவரையும் (வழக்கமான அடிப்படையில்) உள்வாங்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் முதலில் தேவைகளை முன்வைக்கத் தொடங்குகிறோம் … அந்தத் திட்டத்திற்கு இணங்க, தேவையான எண்ணிக்கையை நாம் நியமிக்க முடியுமென நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார் அவர்.

இன்று மக்களவையில் நடைபெற்ற அமைச்சரின் கேள்வி நேர அமர்வில், அனைத்து ஒப்பந்த மருத்துவர்களும் அரசு நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட்டால் நிதி பாதிப்புகள் குறித்து அறிய விரும்பிய அஸிசா முகமட் டுன்’னின் கூடுதல் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

2016 -ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து, 24,000 -க்கும் மேற்பட்ட பட்டதாரி பயிற்சி மருத்துவ அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர், இருப்பினும், சுமார் 1,000 பேருக்கு மட்டுமே நிரந்தர சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு பழைய மரபு பிரச்சனை என்றும் இதனை உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும் கைரி கூறினார்.

இதற்கிடையில், 2022 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், 10,583 மருத்துவ, பல் மற்றும் மருந்தக அதிகாரிகளின் ஒப்பந்த அடிப்படையில் 336.35 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் தொடர்ந்து நியமனம் செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக கைரி கூறினார்.

அந்த மொத்த எண்ணிக்கையில், 4,186 அதிகாரிகள் மதிப்பீடு செய்யப்பட்டு நிரந்தர நியமனத்திற்காக ஜேபிஏ-வுக்குப் பரிந்துரைக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

3,586 மருத்துவ அதிகாரிகள், 300 பல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் 300 மருந்தக அதிகாரிகளை உள்ளடக்கிய 4,186 நிரந்தர நியமனங்களுக்கான விண்ணப்பங்களுக்கு மொத்தம் RM377,485,089 அடுத்த வருடத்திற்குத் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

இது தவிர, சிறப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதற்காக மொத்தம் 3,000 மருத்துவ மற்றும் பல் ஒப்பந்த அதிகாரிகளின் நலனுக்காக அரசாங்கம் RM100 மில்லியனையும் வழங்கியுள்ளதாகக் கைரி கூறினார்.

மருத்துவச் சட்டம், பல் மருத்துவச் சட்டம் போன்ற பல சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஆய்வுகளுடன் ஒப்பந்தப் பணி நியமனப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காண சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

அதே நேரத்தில், ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் மூலம் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருந்தக அதிகாரிகளுக்கு நிரந்தர மற்றும் நிலையான நியமனங்களை வழங்குவதற்கான பொருத்தத்தைக் காண ஓய்வூதியச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்குச் சுகாதார அமைச்சும் ஜேபிஏ-வும் தொடர்ந்து விவாதித்து வருகின்றன.

  • பெர்னாமா