குவா முசாங் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் (ஐபிடி) ஓராங் அஸ்லி ஆர்வலர் நசிர் டோல்லாவை ஓர் இரவு காவலில் வைத்த அதிகாரிகளின் நடவடிக்கையை சுவாரா ரக்யாட் மலேசியா (மலேசிய மக்கள் குரள் – சுவாராம்) கடுமையாகச் சாடியுள்ளது.
அதன் செயல் இயக்குநர் சிவன் துரைசாமி கூறுகையில், சமூக வலைதளங்களில் போலியான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் அந்த ஆர்வலர் கைது செய்யப்பட்டது தேவையற்றது.
ஏழு மணி நேரத்தில் அதிகாரிகள் விசாரணையை முடிக்காதது ஏன் என்றும் சிவன் கேள்வி எழுப்பினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (கேபிஜே) பிரிவு 111 -ன் கீழ், போலீஸ் விசாரணையில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 7) காலை 9 மணியளவில் நசீர் குவா முசாங் ஐபிடிக்கு வந்தார்.
“அதனைத் தொடர்ந்து, அதே நாளில் மாலை 4 மணியளவில் நசீர் கைது செய்யப்பட்டார்.
“குவா முசாங் ஐபிடியில் (நவ. 7), நசீர் ஏழு மணிநேரம் இருந்தும், போலீசார் ஏன் தங்கள் விசாரணையை முடிக்கவில்லை என்று சுவாராம் அறிய விரும்புகிறது. விசாரணை திங்கள்கிழமைதான் (நவம்பர் 8) நடந்ததா?” என்று அவர் இன்று, ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
திங்கள்கிழமை விசாரணை நடத்தப்படாவிட்டால், அதிகாரிகள் நசீரை ஓர் இரவு தடுப்பறையில் அடைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன என்றார் சிவன்.
சமீப காலமாக, ஓராங் அஸ்லி சமூகத்தினரிடையே பல அநீதிகள் நிகழ்ந்துள்ளன என்பது சுவாராமின் கருத்து.
இதற்கிடையில், ஓராங் அஸ்லி சமூகம், குறிப்பாக இளைய தலைமுறையினர், சமூகத்தின் மீதான அரசாங்க அமைப்பின் குறைபாடுகளை அம்பலப்படுத்துவதில் தனித்து நிற்கத் தொடங்கியுள்ளனர் என்று சிவன் கூறினார்.
ஓராங் அஸ்லி சமூகத்தினருக்கு அச்சத்தை உருவாக்கும் முயற்சியாக தான் இத்தகைய தடுப்புக்காவல் இருப்பதாக சுவாராம் கூறியது.
“இந்த நடவடிக்கை அவர்களின் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி தொடர்ந்து பேசுவதிலிருந்து அவர்களின் வாயை மூடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“ஒடுக்கப்பட்ட சமூகமாக, முற்போக்கான தேசத்தை உருவாக்குவதில் இது ஆரோக்கியமற்ற வளர்ச்சியாகும்.
“உள்நாட்டு ஆர்வலர்களைத் தேவையில்லாமல் காவலில் வைப்பதை காவல்துறை நிறுத்தும் என்று சுவாராம் நம்புகிறது,” என்று அவர் கூறினார்.