மலாக்கா பிஆர்என் | சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் பதவியைக் கெலேபாங் சட்டமன்ற வேட்பாளரான லிம் பான் ஹாங் இராஜினாமா செய்ய வேண்டும் எனும் வலியுறுத்தலுக்கு மசீச தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிகேஆர் பொருளாளர் லீ சீன் சுங், நேற்று இந்த அழைப்பு விடுத்தார். மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) கவனம் செலுத்துவதற்கு ஏதுவாகவும், துணையமைச்சர் என்ற வகையில் பிரச்சாரத்தின் போது வளங்களைத் தவறாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் லிம் இராஜினாமா செய்ய வேண்டும் என்று லீ கூறினார்.
அந்த அழைப்புக்குப் பதிலளித்த மசீச செய்தித் தொடர்பாளர் மைக் சோங், லிம் வேட்புமனுவில் எந்தத் தவறும் இல்லை என்றும், லிம்மின் நம்பகத்தன்மையைச் சேதப்படுத்தவே இந்த அழைப்பு என்றும் கூறினார்.
“இது ஆதாரமற்றது. சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் (இசி) தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, வேட்பாளராக லிம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
“இதுபோன்ற விவேகமற்ற அறிக்கைகளைப் பொதுவில் வெளியிடுவதற்கு முன், சம்பந்தப்பட்ட சட்டத்தை ஆய்வு செய்யுமாறு லீக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
‘இது சட்டத்திற்கு எதிரானது அல்ல’
மசீச இளைஞர் செய்தித் தொடர்பாளர், ரியான் ஹோ க்வோக் ஷெங், லிம்மின் நியமனத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக வலியுறுத்தினார்.
ஒரு வழக்கறிஞரான ஹோ, லிம் சட்டத்தை மீறவில்லை என்று மத்திய அரசியலமைப்பை மேற்கோள் காட்டினார்.
“மலாக்கா மாநில அரசியலமைப்பின் பிரிவு 13 (1) (c) -இன் கீழ், வருமானத்துடன் கூடிய பதவியை வைத்திருப்பது, மலாக்கா பிஆர்என் -இல் போட்டியிடுவதற்கு ஒரு வேட்பாளர் தகுதியிழப்புக்கு வழிவகுக்கும் என்பதை மறுக்க முடியாது.
“இருப்பினும், கூட்டாட்சி அரசியலமைப்பின் 160 (2) -வது பிரிவின்படி, வருமானம் ஈட்டும் பதவிகள் ஒரு சில உயர் பதவிகளுக்கு மட்டுமே உட்பட்டவை, அவற்றில் எதிலுமே லிம் இல்லை.
“இது முழுநேர அரசு ஊழியர்களையும் உள்ளடக்கியது, ஆனால் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 132 (3) (a) நிர்வாகத்தின் உறுப்பினராக இருக்கும் பதவி ஓர் அரசு ஊழியராக கணக்கிடப்படாது என்று கூறுகிறது,” என்று அவர் ஒரு தனி அறிக்கையில் கூறினார்.
ஹோவின் கூற்றுப்படி, ஜெஃப்ரி கிட்டிங்கனும் கடந்த ஆண்டு சபா பிஆர்என் -இல் போட்டியிட்டார், அப்போது அவர் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறையின் துணை அமைச்சராக இருந்தார்.
பதிவிற்கு, கிட்டிங்கான் தம்புனான் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர், பதவியை இராஜினாமா செய்தார், பிறகு இரண்டாம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
“தேர்தல் சட்டத்தைப் பின்பற்ற தேர்தல் ஆணையம் தவறிவிட்டதா? அப்படியானால், லீ தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டும்,” என்று ஹோ மேலும் கூறினார்.