கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தை அனைத்து எம்.பி.க்களும் ஆதரிக்க வேண்டும் – புங் மொக்தார்

நாடாளுமன்றம் l இன்று, மக்களவையில், அசாலினா ஓத்மான் சைட்-ஆல் முன்மொழியப்பட்ட கட்சி தாவல் எதிர்ப்பு சட்டத்தை ஆதரிக்குமாறு, அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழைப்பு விடுத்தார்.

இன்று, பட்ஜெட் 2022 விவாத அமர்வின் போது, ​​புங் மோக்தார் ராடின், அரசியல் மற்றும் அரசாங்க நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் செழிப்புக்காகவும் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

தனது விவாத அமர்வில் குறுக்கிட்டு, நாட்டில் அரசியல் நிலைத்தன்மை சீர்குழைய, அரசியல்வாதிகள் மத்தியில் நடக்கும் கட்சி தாவல் பிரச்சினையை எழுப்பிய காலித் சமத்தின் கூற்றை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.

“எனக்கும் இந்தக் கட்சி தாவல்கள் பிடிக்காது, சபாவில் முன்பு இது நடந்தபோது, ​​​​நான் மட்டும்தான் கட்சி தாவாமல் இருந்தேன். அப்போது கட்சி தாவல்களில் ஷா ஆலம் (காலித்) கூட (அப்போது அரசாங்கத்தில்) இருந்தார், எனவே அப்போது ஷா ஆலமும் விழுந்தார்.

“எனவே, நாம் தேர்தல்களை நடத்த விரும்புகிறோம், அதனால் கட்சி தாவல் இல்லை, மேலும் பெங்கராங் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குகிறார்.

“நான் ஆதரிக்கிறேன். ஷா ஆலமும் (காலித்) ஆதரிப்பார் என்று நம்புகிறேன். எங்களுக்கு எந்தத் தாவல்களும் வேண்டாம். நாம் வெற்றி பெற்றால், வெற்றி; தோல்வியுற்றால், தோல்வி, நீங்கள் எதைப் பற்றி பயப்பட வேண்டும்? போராடுவோம்,” என்று புங் மொக்தார் கூறினார்.

முன்னதாக, சில தரப்பினரின் கட்சி தாவல் நடவடிக்கை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்தது என்று காலிட் கூறினார்.

“பெரும்பான்மையுடன் இருந்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை, கட்சி தாவல் மூலம் வீழ்த்தியவர்களின் பொறுப்பற்ற செயல் இது, ஒரு துரோகம் நடந்ததால் மலேசியாவில் அரசியல் நிலைத்தன்மையின்மை இப்போது வரை தொடர்கிறது,” என்று காலிட் கூறினார்.

கடந்த செப்டம்பரில், கட்சி தாவல் நடைமுறை மக்களுக்கு மட்டுமல்ல, தரவு சேகரிப்பு மற்றும் தேர்தல் போன்ற பிற விஷயங்களில் அதிகச் செலவு செய்யும் அரசியல் கட்சிகளுக்கும் அநீதி இழைப்பதால், கட்சி தாவல் எதிர்ப்பு மசோதாவை மக்களவையில் விரைவில் தாக்கல் செய்ய அஸலினா அழைப்பு விடுத்தார்.

  • பெர்னாமா