பிரசரணாவின் முன்னாள் தலைவர் தாஜுதீன் அப்துல் இரஹ்மான், இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதராக விரைவில் நியமிக்கப்படுவார்.
அந்த அம்னோ உயர்மட்டத் தலைவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த நியமனத்தை உறுதி செய்ததோடு, அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறியது.
பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினருமான தாஜுதீன், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தூதுவராக தனது கடமைகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருங்கள்” என்று அந்த வட்டாரம் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தது.
இன்று தொடக்கம், பணி நிமித்தமாக ஜகார்த்தா சென்ற பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் பணிக்குழுவில் அவரும் கலந்துகொண்டதை அடுத்து, இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதராக தாஜுதீனின் நியமனம் குறித்த ஊகங்கள் வெடித்தன.
இந்தோனேசியச் செய்தித் தளமான அந்தாராநியூஸ் (Antaranews), கடந்த மாதம் மலேசிய அரசாங்கம் தாஜுதீனைப் புதியத் தூதராக நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்திருந்தது.
ஓர் அமைச்சரின் அரசியல் செயலாளரான ஓர் ஆதாரத்தை மேற்கோள்காட்டிய அந்தாராநியூஸ், ஆனால் அதன் சட்டபூர்வத் தன்மையை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியதாகச் சொன்னது.
ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோது, இது ஒரு வதந்தி என்றும், மலேசிய வெளியுறவு அமைச்சின் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது என்றும் கூறியது.
“கருத்துகள் எதுவும் இல்லை. நன்றி,” என்று மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்தோனேசியாவுக்கான புதியத் தூதுவராக பிரதமர் தாஜுதீனை நியமித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளன.
“பிரதமர் தாஜுதீனின் பெயரை முன்வைத்துள்ளார், யாங் டி-பெர்த்துவான் அகோங் அல்லது (இந்தோனேசிய ஜனாதிபதி) ஜோகோவி அதை நிராகரிக்காத வரை அது கிட்டத்தட்ட உறுதியானது.
“இன்னும் சில வாரங்களில் அறிவிப்பு வெளியிடப்படும்,” என்று அந்த வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.
யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் நற்சான்றிதழ் கடிதத்தை ஒப்படைக்கும் விழாவில் மட்டுமே தூதுவரின் நியமனம் அதிகாரப்பூர்வமாகச் செய்யப்படும்.
மார்ச் 21, 2019 முதல் அந்தப் பதவியை வகிக்கும் ஜைனால் அபிடின் பாக்காருக்குப் பதிலாக தாஜுதீன் நியமிக்கப்படுவார்.