துவான் இப்ராஹிம் : கார்பன் உமிழ்வில் மலேசியா தரவுகளைச் சிதைக்கவில்லை

மலேசியாவின் பசுமைக்குடில் வாயு உமிழ்வு அறிக்கையிடல் பொறிமுறையைச் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் ஆதரித்தார்.

வாயு வெளியேற்றத்தின் உண்மையான அளவை விட, ஐ.நா.விடம் குறைவாக காட்டப்பட்டதாக நாட்டின் மீது  குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இது நடந்துள்ளது.

“சிதைக்கப்பட்ட தரவு” மலேசியாவை “73 விழுக்காடு” கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து காட்டி விவரிக்க அனுமதித்தது என்ற தி வாஷிங்டன் போஸ்ட்டின் விசாரணை அறிக்கை குறித்து துவான் இப்ராஹிம் கருத்துத் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் உள்ள காடுகளை விட, “நான்கு மடங்கு வேகமாக” நாட்டில் உள்ள மரங்கள் கார்பனை உறிஞ்சும் என்ற மலேசியாவின் கூற்றையும் அந்த அமெரிக்க செய்தித்தாள் மறுத்துள்ளது.

கட்டுரையின் படி, 2016 -ஆம் ஆண்டில் 422 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்த போதிலும் 81 மில்லியன் டன்கள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை மட்டுமே மலேசியா ஐ.நா.விடம் தெரிவித்தது.

எத்தனை நாடுகள் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்து ஐ.நா.விடம் தெரிவிக்கின்றன என்பதற்கு மலேசியா ஓர் உதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.

குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த துவான் இப்ராஹிம், புத்ராஜெயாவின் அறிக்கையை ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (யு.என்.ஃப்.சி.சி.சி.) ஆதரித்தார்.

துவான் இப்ராஹிம், நேற்று ஒரு மூன்று பக்க அறிக்கையில், அனைத்து யு.என்.ஃப்.சி.சி.சி. தேவைகளுக்கு ஏற்ப அரசாங்க அறிக்கை “மிகக் கடுமையான செயல்முறை” மூலம் தயாரிக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்தச் செயல்முறையில் வல்லுநர்கள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் தரவு வழங்குநர்களுடன் “பல பங்குதாரர் ஆலோசனைகளும்” அடங்கும் என்றார் அவர்.

“யு.என்.ஃப்.சி.சி.சி. -க்குத் தேவையான இருபதாண்டு புதுப்பிப்பு அறிக்கையின் (பி.யு.ஆர்) அறிக்கையானது முழுமையான செயல்முறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் தகவல்களின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதைச் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சு (காசா) வலியுறுத்த விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.

மேலும் விவரித்த துவான் இப்ராஹிம், யு.என்.ஃப்.சி.சி.சி. -ஆல் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் மலேசியாவின் அறிக்கையை ஆய்வு செய்து வருவதாகக் கூறினார்.

“யு.என்.ஃப்.சி.சி.சி. பி.யு.ஆர். செயல்முறையின் கீழ், மலேசியா இதுவரை மூன்று சர்வதேச ஆலோசனை மற்றும் பகுப்பாய்வு அமர்வுகள் மற்றும் இரண்டு எளிதாக்கும் பார்வைப் பகிர்வு அமர்வுகளுக்கு உட்பட்டுள்ளது.

“முழு செயல்முறையும் வெளிப்படைத்தன்மை, துல்லியம், நிலைத்தன்மை, ஒப்பீடு மற்றும் முழுமை ஆகியவற்றின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.

“எனவே, யு.என்.ஃப்.சி.சி.சி. செயல்முறை மற்றும் முடிவுகளின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கிய வாஷிங்டன் போஸ்டின் நடவடிக்கைக்கு மலேசியா வருந்துகிறது,” என்று அமைச்சர் கூறினார்.

“குறைபாடுள்ள தரவுகளின் மீது கட்டமைக்கப்பட்ட நாடுகளின் உறுதிமொழிகள், விசாரணைக்குப் பின் கண்டுபிடிப்புகள்” (“Countries Pledges Built on Flawed Data, Post Investigation Finds” ) என்றத் தலைப்பில், நவம்பர் 7 அன்று வெளியிடப்பட்ட வாஷிங்டன் போஸ்ட்டின் கட்டுரை, தேசிய தரவுகளின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியது, யு.என்.ஃப்.சி.சி.சி. அறிக்கை செயல்முறையை அல்ல.

துவான் இப்ராஹிம் தற்போது பிரிட்டனின், கிளாஸ்கோ’வில் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் (COP26) கலந்துகொண்டுள்ளார்.