பிஆர்என் மலாக்கா | தேசியக் கூட்டணியின் (பிஎன்) முதல்வர் வேட்பாளர் பெர்சத்து தலைவர்களில் இருந்து நியமிக்கப்படுவார் என்று முஹைதின் யாசின் இன்று தெரிவித்தார்.
முதல்வர் வேட்பாளர் குறித்து கூட்டணி ஏற்கனவே ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அந்தப் பிஎன் தலைவர் கூறினார், ஆனால் அதைப் பின்னர் அறிவிப்பது பிஎன்-இன் உத்தி என்ற அவர் அது குறித்து மேலும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
“நாங்கள் விரைவில் அறிவிப்போம். அது வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக இருக்கும் என்பது உறுதி,” என்று அவர் இன்று பிற்பகல் பெம்பானில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
“ஏற்கனவே முதல்வர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். பெர்சத்துவுக்குப் பெரிய இடம் உள்ளது, பாஸ் போன்ற நண்பர்கள் நம்பிக்கை கொடுத்தால், பெர்சத்துவில் இருந்து முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்,” என்று அவர் கூறினார்.
பெர்சத்து 28 மலாக்கா மாநிலச் சட்டமன்ற இடங்களில் 15 -இல் போட்டியிடுகிறது, அதே நேரத்தில் பாஸ் மற்றும் கெராக்கான் முறையே எட்டு மற்றும் ஐந்து இடங்களில் போட்டியிடுகின்றன.
பிஎன் பெர்சத்து, பாஸ், கெராக்கான், எஸ்.தி.ஏ.ஆர். மற்றும் எஸ்.ஏ.பி.பி. ஆகியவற்றின் கூட்டாகும்.
பெர்சத்து உதவித் தலைவரும், மலாக்கா பிஎன் தலைவரும், மலாக்கா பெர்சத்து தலைவருமான முகமட் ரஃபிக் நைசாமோஹிதீன் வேட்பாளர்களில் முக்கியமான ஒருவராக நம்பப்படுகிறது.
குறிப்பிடப்பட்ட மற்றொரு வேட்பாளர் மஸ்ஜிட் தானா மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எர்மியாத்தி சம்சுடின் ஆவார், இவரும் பெர்சத்துவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தஞ்சோங் பிடாரா மாநிலத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேர்தல் முடிவுகள் எந்தக் கூட்டணிக்கும் போதியப் பெரும்பான்மை இல்லை என்று காட்டினால், பிஎன் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கத் தயாரா என்றக் கேள்விக்கு, ஊகங்களில் தாம் ஆர்வம் காட்டவில்லை என்று முகைதின் கூறினார்.
எவ்வாறாயினும், வாக்காளர்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பிஎன் -ஐ தெரிவு செய்வார்கள் என்று முகைதின் நம்பிக்கை தெரிவித்தார்.