மலாக்கா பிஆர்என் | தேசிய முன்னணிக்கு (தேமு) எதிராக தேசியக் கூட்டணி (தேகூ) மோதலைக் கண்டுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), கூட்டாட்சி மட்டத்தில் ஒன்றாகச் செயல்படும் இரு அரசியல் கூட்டணிகளுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் எழவில்லை என்று முஹைதீன் யாசின் நம்பினார்.
“நாங்கள் அமைத்துள்ள கூட்டாட்சி அரசாங்கம் பல கட்சிகளின் அசாதாரணக் கூட்டணியாகும், ஆனால் இது தேசிய நலனுக்காக இருப்பதாக நான் நினைக்கிறேன். இது சில நிலைத்தன்மைகளை உறுதிப்படுத்த செய்யப்பட்டது.
“மத்திய அரசு மட்டத்தில் இது பரவாயில்லை என்று நான் நினைக்கிறேன். எனவே, இது எந்தப் பிரச்சினையையும் எழுப்பாது என்று நம்புகிறேன். பிரதமர் (இஸ்மாயில் சப்ரி யாக்கோப்) தேமு அல்லது தேகூ ஆகியவற்றில் இருக்கும் மற்ற அமைச்சரவை உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
“இருப்பினும், அந்தந்தக் கூட்டணிகள் (தேமு மற்றும் தேகூ) தனித்தனியாக போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது, அதை நாம் மதிக்க வேண்டும்,” என்று அவர் மலாக்கா தேர்தலுக்கான தேகூ அறிக்கையை வெளியிட்ட பின்னர் ஷா ஆலாமில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக, மலாக்கா தேர்தலில் 28 மாநிலத் தொகுதிகளிலும் அவரது தலைமைக்கும் தேமு-க்கும் இடையேயான போட்டி மத்திய அரசில் அவர்களின் உறவைப் பாதிக்குமா என்று அந்தத் தேகூ தலைவரிடம் கேட்கப்பட்டது.