மலாக்கா பிஆர்என் | தேசியக் கூட்டணிக்கு (தேகூ) மலாக்கா மாநில அரசாங்கத்தை வழிநடத்தும் ஆணை கிடைத்தால், அது மலாக்கா கரையோரப் பொருளாதார மண்டல மேம்பாட்டுத் திட்டத்தின் (M-WEZ) பொருளாதார நம்பகத்தன்மையை மதிப்பாய்வு செய்யுமென உறுதியளித்துள்ளது.
மலாக்கா தேகூ தலைவர் முகமட் ரபீக் நைசாமோஹிதீன் கூறுகையில், பல கடல் சீர்திருத்தத் திட்டங்களால் மாநிலத்தில் உள்ள மீனவர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பம் குறித்து புகார் தெரிவித்த பிறகு, வளர்ச்சி என்ற பெயரில் எந்தச் சமூகமும் ஓரங்கட்டப்படக் கூடாது என்றார்.
“மாநில அரசாங்கத்தைத் தேகூ வழிநடத்தினால், இந்த M-WEZ திட்டம் மாநிலத்திற்கு மட்டுமல்ல, சுற்றியுள்ள பகுதிகள் உட்பட மக்களுக்கும் எந்த அளவிற்குப் பயனளிக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம்.
“நம் மாநிலத்தை மேம்படுத்திவதில், இந்த மீனவர்களைப் போல எந்தக் குழுவும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் நலனை உறுதி செய்ய வேண்டும்.
“வளர்ச்சித் திட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடாது,” என்று மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
பெர்சத்து உறுப்பினரான ரஃபீக், மலேசியாகினி அறிக்கைக்குப் பதிலளித்தபோது, மாநிலத்தில் உள்ள மீனவர்களின் அவலநிலையை எடுத்துக்காட்டும் வகையில், நடந்துகொண்டிருக்கும் பல கடல் மீட்புத் திட்டங்களால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இத்திட்டம் சுற்றுச்சூழலைச் சேதப்படுத்துவதோடு, கரையோர கடல் வாழ் உயிரினங்கள் இடம்பெயர்ந்து செல்லவும் காரணமாக அமைவதால், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
மீட்புத் திட்டங்கள் M-WEZ திட்டத்தை விட சிறியவை, இது முழு மலாக்கா கடற்கரையில் பாதியை மீட்டெடுக்க முயல்கிறது.
தேமு அறிக்கையிலுள்ள M-WEZ திட்டம்
M-WEZ திட்டத்தை மலாக்கா பிஆர்என் அறிக்கையில் தேசிய முன்னணி (தேமு) குறிப்பிட்டுள்ளது, இது மாநிலத்தின் எதிர்காலப் பொருளாதார மாற்றமாக அது விவரிக்கிறது.
திட்டம் 10,000 ஹெக்டேர்களை உள்ளடக்கியது, மேலும் சுங்கை ஊடாங் கடற்கரையிலிருந்து தொடங்கி குண்டோர் கடற்கரை வழியாக கெலேபாங், கேசிடாங், கோத்தா லக்சமானா, பண்டார் ஹிலிர், தெலோக் மாஸ், செர்காமின் வடக்குப் பகுதி வரை 33 கிமீ மலாக்கா கடற்கரையை உள்ளடக்கியது.
இது மலாக்கா கடற்கரையை மீட்டெடுத்து, பெரிய பகுதி புதிய நிலத்தை உருவாக்கும்.
இது துறைமுகப் பகுதி, வணிக மாவட்டம், நகராட்சி மற்றும் தளவாட மையமாக உருவாக்கப்படும்.
தெலோக் மாஸ் தொகுதியில் போட்டியிடும் ரபீக் கூறுகையில், மீனவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய தேகூ பாடுபடும் என்றார்.
“நாங்கள் மாநில அரசாங்கமாக மாறினால், இந்தத் திட்டம் எந்த அளவிற்கு மாநிலத்திற்குப் பயனளிக்கும் என்பதைப் பார்த்து அதன் அடிப்படையில் முடிவெடுப்போம்.
“ஆனால் விளைவு எதுவாக இருந்தாலும், அது அவர்களின் மாத வருமானம் உட்பட ஒவ்வொரு அம்சத்திலிருந்தும் மீனவச் சமூகத்தின் நலன்களைக் கண்டிப்பாக கணக்கில் எடுத்துக்கொள்ளும், மேலும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அவர்கள் பெற வேண்டிய இழப்பீடு வடிவமும் கணக்கில் எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டமானது, செப்டம்பரில் மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது, பிகேஆர், டிஏபி மற்றும் அமானாவின் அனைத்து 11 எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக வாக்களித்தனர்.
இருப்பினும், ஆதரவாக வாக்களித்த ரபீக் உட்பட 16 அரசாங்கச் சட்டமன்ற உறுப்பினர்களால் அவர்களது எண்ணிக்கை தோற்கடிக்கப்பட்டது. வாக்களிப்பின் போது ஓர் அரசு சட்டமன்ற உறுப்பினர் வரவில்லை.
‘தேகூ கட்சி ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறது’
அம்னோ-பெர்சத்து அரசாங்கத்தின் போது இந்தத் திட்டத்தை ஆதரிக்க ஏன் வாக்களித்தீர்கள் என்று கேட்டதற்கு, முடிவெடுப்பதில் தேகூ -இன் முடிவை ஆதரித்ததாக ரபீக் சொன்னார்.
“M-WEZ ஆனது தேமு தலைமையிலான மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அப்போது தேகூ சிறுபான்மையினர் மட்டுமே, அனைத்து முடிவுகளும் பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட்டது.
“நாங்கள் அரசாங்கத்தில் ‘ஒற்றுமை’ என்றக் கொள்கைக்குக் கட்டுப்பட்டுள்ளோம், வாக்களிப்பதில் ஒழுக்கம் உள்ளது, எடுத்துக்காட்டாக சட்டமன்றத்தில்.
“அரசாங்கக் கூட்டமைப்பால் தீர்மானிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அல்லது பெரும்பான்மையின் விருப்பத்திற்கு எதிராக நாங்கள் வாக்களித்தால், நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராகப் பார்க்கப்படுவோம்,” என்று அவர் கூறினார்.
தேமு மற்றும் தேகூ மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானைத் தவிர, 28 மாநிலத் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் முக்கோணப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
மலாக்காவில், தேமு அம்னோ, மசீச மற்றும் மஇகா ஆகியக் கட்சிகளைக் கொண்டுள்ளது, தேகூ பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிஎச்-இல் பிகேஆர், டிஏபி மற்றும் அமானா ஆகியவை உள்ளன.