பினாங்கு முஃப்தி, வான் சலீம் வான் முகமட் நூர், பிற மாநிலத் தலைவர்களுடன் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிடுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசியை அறிவுறுத்தினார்.
சூதாட்ட நடவடிக்கைகளைப் பினாங்குடன் இணைக்கும் சனுசியின் அறிக்கையே இதற்குக் காரணம், இது இயற்கைக்கு மாறான மற்றும் துரதிர்ஷ்டவசமான ஒன்று என்று வான் சலீம் விவரித்தார்.
“ஒரு ‘சகோதரர்’ என்ற முறையில், அறிக்கைகளை வெளியிடுவதில் மிகவும் கவனமாக இருக்குமாறு கெடா எம்பிக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்.
“ஒரு மாநில அரசாங்கத்தின் மரியாதைக்குரிய தலைவராக, அவர் வகிக்கும் பதவியின் பிம்பத்தை அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அவரது செல்வாக்கு கிராமம் அல்லது பகுதி மட்டத்தில் இருக்கும் ஒரு தலைவர் போன்று குறைவானது அல்ல.
நேற்று, கெடாவில் அனைத்து 4D கடைகளின் வணிக உரிமத்தைப் புதுப்பிக்கத் தடை செய்வதாக அறிவித்தபோது, சனுசி பினாங்கை 4D எண்கள் வாங்குவதற்கான இடமாக குறிப்பிட்டார்.
“அரசாங்கம் இனி (புதிய) உரிமம் கொடுக்காது, நீங்கள் வாங்க விரும்பினால் (4D), பினாங்கில் வாங்கிக் கொள்ளவும்.
“நான் ஒரு முஸ்லிம், சூதாட முடியாது,” என்று அவர் கூறினார்.
சனுசியின் அறிக்கை பினாங்கில் உள்ள பல்வேறு இஸ்லாமிய மத நிறுவனங்களை அவமதிப்பதாக வான் சலீம் விவரித்தார்.
2008 -ஆம் ஆண்டு முதல் பினாங்கு இஸ்லாமியச் சமய மன்றத்திற்கு 70 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு உட்பட, பக்காத்தான் ஹராப்பான் கீழ் மாநில அரசாங்கத்தால் ஒரு கூட்டாட்சி மதமாக இஸ்லாத்தின் நிலைப் பாதுகாக்கப்பட்டு, உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
“… அவர் சிந்தனையில் முதிர்ச்சியைக் காட்ட வேண்டும், மலேசியக் குடும்பத்தின் உணர்வைப் பாராட்டுவதில் மக்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும்,” என்று வான் சலீம் கூறினார்.