கெடாவில் 4D சூதாட்டத்தைத் தடை செய்வதற்கும் மது விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்குமான பாஸ் -இன் நடவடிக்கையை மற்றொரு டிஏபி தலைவர் கடுமையாகச் சாடினார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வி கணபதிராவ், இந்த நடவடிக்கையை மலேசியாவில் தலிபான் சித்தாந்தத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி என்று விவரித்தார்.
உண்மையில், சமீப காலமாக பாஸ் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகளில் அதிகம் தலையிட விரும்புகிறது என்று அவர் கூறினார்.
“பாஸ் எப்போதும் அது அனைவருக்குமான கட்சி என்று கூறிக்கொள்கிறது. ஆனால், மற்ற மதங்களின் உணர்வுகளில் கட்சி உண்மையில் அக்கறை காட்டுகிறதா? அவர்கள் மற்ற இனங்களை மதிக்கிறார்களா?
“சூதாட்ட நடவடிக்கைகள் குடும்ப நிறுவனங்களின் வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றன என்ற நம்பிக்கையில் பாஸ் உறுதியாக இருந்தால், அவர்கள் கெந்திங் மலையில் உள்ள சூதாட்ட விடுதிகளையும், நாட்டில் செயல்படும் மதுபான நிறுவனங்களையும் மூட வேண்டும்.
“அவர்கள் இப்போது மத்திய அரசு. கேசினோ, மது நிறுவனங்களையும் மூடலாம். கெடா மாநிலத்தை மட்டும் குறிவைப்பது ஏன்?” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
வணிக உரிமங்களைப் புதுப்பிக்காமல், 4D கடைகளுக்குத் தடை விதித்த கெடா அரசின் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
அதன் முதலமைச்சர் முஹம்மது சனுசி நோர், சூதாட்ட நடவடிக்கைகள் கடன் பிரச்சினைகளைத் தவிர குடும்ப நிறுவனங்களின் வீழ்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
அனைத்து வளாகங்களிலும், குறிப்பாக தேவை இல்லாத கிராமப்புறங்களில் மது விற்பனையைக் கட்டுப்படுத்தவும் கெடா முடிவு செய்துள்ளது.
‘மலாய்க்காரர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்’
இதற்கிடையில், மலாய்க்காரர்கள் உட்பட மலேசியர்கள் தலிபான் சித்தாந்தம் நாட்டிற்குள் நுழைவதை ஏற்கவில்லை என்று கணபதிராவ் கூறினார்.
எதிர்காலத்தில் மேலும் பல்வேறு கொள்கைகள் அறிமுகம் செய்யப்படுமோ என்ற அச்சம் உள்ளது என்றார்.
“பாஸ் -இன் அணுகுமுறை தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால், எதிர்காலத்தில் அவர்கள் ஆண்களும் பெண்களும் தியேட்டரில் ஒன்றாக உட்காருவதைத் தடுக்கலாம், ஆண்களும் பெண்களும் ஒரே பேருந்து சேவையைப் பயன்படுத்துவதைத் தடை செய்வார்கள், மேலும் வெவ்வேறு பாலின நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்,” என்றார் அவர்.