சுற்றுலாத் துறை : கோவிட் -19 தொற்றால் அதிகப் பெண்கள் பாதிப்பு – நான்சி

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின், 2020 பகுப்பாய்வின்படி, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாத் துறையில் அதிகமான பெண் தொழிலாளர்கள் கோவிட் -19 தொற்றின் விளைவாக ஆண்களை விட அதிகமாக வேலை இழந்துள்ளனர். காரணம், அவர்களில் அதிகமானோர் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மலேசியாவில், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள், 2019 -இல் 50.3 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது, 2020 -இல் இரண்டு விழுக்காடு குறைந்து 48.3 விழுக்காடாக உள்ளனர் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் நான்சி சுக்ரி தெரிவித்தார்.

“தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள், விற்பனை மற்றும் மொத்த விற்பனை, கலை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பிறச் சேவைகள் உட்பட சுற்றுலாத் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய, பசிபிக் நாடுகளில் சுற்றுலாத்துறையில் பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சுற்றுலா அமைப்பின் (UNWTO) மாநாட்டின் ‘பாலின பிம்பம்’ மூலம் மறுவாழ்வுக்கான கொள்கை : சுற்றுலாத்துறையில் பெண்களுக்குக் கோவிட்-19 தாக்கம் குறித்த அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.

2020 வளர்ச்சி மற்றும் வர்த்தகத்திற்கான ஐ.நா. மாநாட்டின் சமீபத்தியப் பகுப்பாய்வில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்களிப்பைச் சார்ந்திருக்கும் நாடுகளில் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படும் என்று நான்சி கூறினார்.

இந்தச் சவாலை முறியடிப்பதில், மலேசிய அரசாங்கம் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும், ஒட்டுமொத்த சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் தொடர்ந்து ஆதரவு நடவடிக்கைகள், ஊக்கத்தொகைகள் மற்றும் பல்வேறு முயற்சிகளை அறிமுகப்படுத்தி வருவதாக நான்சி கூறினார்.

பெண்கள் மற்றும் பின்தங்கிய குழுக்களை இலக்காகக் கொண்ட முன்முயற்சிகளைத் தவிர, அரசாங்கம் சமீபத்தில் 2022 பட்ஜெட்டை தாக்கல் செய்தது, இது சுற்றுலாவில் பெண்களுக்குச் சமமான பலன்களை வழங்குவதற்கான அர்ப்பணிப்புடன் ஒட்டுமொத்த மீட்சியை நோக்கி ஒரு பெரும் முயற்சியை எடுத்தது என்றும் அவர் சொன்னார்.

“இதுவரை, 6,034 பெண் சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சிடம் இருந்து நான்கு வகைகளில் உரிமம் பெற்றுள்ளனர், அதாவது நகர்ப்புற சுற்றுலா வழிகாட்டிகள், இயற்கை சுற்றுலா வழிகாட்டிகள், சிறப்புப் பகுதி சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் உள்ளூர் சமூகப் புரவலர்கள். இது மலேசியாவின் உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளில் சுமார் 35 விழுக்காட்டிற்குப் பங்களிக்கிறது, அதாவது மொத்தம் 17,067,” என்று அவர் கூறினார்.

நான்சியால் நடத்தப்பட்ட இரண்டு நாள் நிகழ்வானது, தேசியச் சுற்றுலா நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், பெண் தொழில்முனைவோர் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பெண் பிரதிநிதிகள் உட்பட 100 -க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட கலப்பின முறையில் (நேரடி & நேரலை) நடைபெற்றது.

  • பெர்னாமா