பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் முகமது அஸ்மின் அலி, பிகேஆரின் உள்விவகாரங்களைப் பற்றி கவலைப்படாமல், தேசிய முன்னணி (தேமு) உடனான தேசியக் கூட்டணியின் (தேகூ) போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிகேஆர் பொருளாளர் லீ சீன் சுங் கூறினார்.
நேற்று, மாச்சாப் ஜெயா வருகையின் போது, பிகேஆரால் கைவிடப்பட்ட தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஜினி லிம் குறித்து, சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் வருத்தம் தெரிவித்ததற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.
லிம் முன்பு பிகேஆர் துணைத் தலைவராக இருக்கும் அஸ்மினுடன் தொடர்புடையவர். அஸ்மின் பின்னர் விலகி பெர்சத்துவில் சேர்ந்தார், ஆனால் லிம் பிகேஆரிலேயே இருந்தார்.
“அவர் (அஸ்மின்) தேகூ மற்றும் தேமு இடையே உள்ள சிக்கலான உறவைத் தீர்த்திருக்க வேண்டும். பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) உடன் அவருக்கு இப்போது எந்த உறவும் இல்லை,” என்று மாச்சாப் ஜெயாவில் பிரச்சாரம் செய்யும் லீ மலேசியாகினியிடம் கூறினார்.
தேகூ மற்றும் தேமு இரண்டும் ஒரே கூட்டாட்சி அரசாங்கத்தின் பகுதியாக இருந்தாலும், 28 மலாக்கா மாநிலத் தொகுதிகளிலும் ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றன.
மாச்சாப் ஜெயாவில், லிம்மிற்குப் பதிலாக பிகேஆர் லாவ் பிங் ஹாவை நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, சில அடிமட்ட மக்களிடையே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது, அஸ்மின் அதைச் சாதகமாக்க முயற்சித்தார்.
அஸ்மினால் இன்னும் பிகேஆரை மறக்க முடியவில்லை என்ற லீ, கட்சி இன்னும் பொருத்தமானது என்பதை இது காட்டுகிறது என்று கூறினார்.
லிம், நியமனம் செய்யப்படவில்லை என்றாலும், லாவ்’வுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார் என்பதையும் லீ வலியுறுத்தினார்.
“அவர் (லிம்) தனது நிலைப்பாட்டைக் கூறியுள்ளார். அவரது நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் மூலம், பிகேஆர் மாச்சாப் ஜெயா வேட்பாளரை ஆதரிப்பதாக அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
“அஸ்மின் இதுபோன்ற கிசுகிசுக்களில் ஈடுபடட்டும், நாங்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்வதில் எங்கள் கவனம் செலுத்துவோம்,” என்று லீ கூறினார்.
மாச்சாப் ஜெயாவில், தேகூ-லிருந்து தை சியோங் ஜியுல், தேமு-லிருந்து ங்வீ ஹீ செம், இமானைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர் அஸ்லான் டாவுட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான 12 நாட்கள் பிரசாரக் காலம் இந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. மலாக்கா மக்கள் 20 நவம்பர், சனிக்கிழமையன்று 28 மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள்.