போராட்டத்தில் இருக்கும் கூட்டணியால் மலாக்காவில் நிலைத்தன்மையை உருவாக்க முடியாது – அன்வார்

பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவர் அன்வார் இப்ராஹிம், தேசியக் கூட்டணியும் (தேகூ), தேசிய முன்னணியும் (தேமு), ஒன்றுக்கொன்று ‘போரில்’ இருந்தால், மலாக்காவில் அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றார்.

நேற்றிரவு, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான (பிஆர்என்) மெய்நிகர் பேச்சரங்கில் கலந்துகொண்ட அன்வார், தேமு அல்லது தேகூ வெற்றி பெற்றால் வாக்காளர்கள் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

“அவர்கள் இப்போது போரில் ஈடுபட்டுள்ளனர். தேகூ மற்றும் தேமு இடையே கடுமையான போர் நடந்துகொண்டுள்ளது. ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள் ஆனால் உள்ளுக்குள் சண்டை போடுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

தேகூ மற்றும் தேமு கூட்டாட்சி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், 28 மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒன்றுக்கொன்று மோதுகின்றன.

“காலை பிரச்சாரத்தில் பெர்சத்துவிலிருந்து துணையமைச்சர் பேசுகிறார். மதியம், அம்னோவைச் சார்ந்த அமைச்சர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அதே இடம், ஆனால் கூட்டணியைச் சேர்ந்த வெவ்வேறு கட்சிகள்.

“மலாக்காவில், முக்கிய பிரச்சினை அரசியல் நிலைத்தன்மை. தெளிவான கொள்கை கொண்ட மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைமையை நாம் தேர்வு செய்ய வேண்டும். கடவுள் விரும்பினால், பிஎச்-ஆல் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

2018 பொதுத் தேர்தலில் (ஜிஇ) தேர்ந்தெடுக்கப்பட்ட பிஎச் மாநில அரசாங்கத்தைக் கவிழ்த்தவர்களைத் தண்டிக்க வேண்டுமென வாக்காளர்களை அன்வார் வலியுறுத்தினார்.

மார்ச் 2020 -இல், பிஎச் மாநில அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, அது அம்னோ-பெர்சத்து மாநில அரசாங்கத்தால் மாற்றப்பட்டது, மீண்டும் அது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் விலகல் காரணமாக அக்டோபர் 2021 -இல் சரிந்தது.

அம்னோ-பெர்சத்து அரசாங்கத்தைக் கவிழ்த்த சமீபத்தியத் தொடரில், இட்ரிஸ் ஹரோன் மற்றும் நோர் அஸ்மான் ஹசான் இருவரும் அசாஹான் மற்றும் பந்தாய் குண்டோர் தொகுதிகளில் பிஎச் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

2018 -இல் சட்டப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஎச் அரசாங்கத்தை மீட்டெடுக்க உதவ முயன்ற இட்ரிஸ் மற்றும் நோர் அஸ்மான் துரோகிகள் அல்ல என்று அன்வார் வலியுறுத்தினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சி தாவுவதைத் தடுக்க, பிஎச் அதன் வேட்பாளர்களைத் தணிக்கை செய்துள்ளதாகவும் அந்தப் பிகேஆர் தலைவர் உறுதியளித்தார்.