சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி நாகேந்திரன் கே தர்மலிங்கம், குடியரசின் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) லூசியன் வோங்கிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய உள்ளார்.
அந்நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு, மலேசியரை “அலட்சியம்” செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பானது.
இன்று பிற்பகல், சிங்கப்பூரில் உள்ள அக்குடும்பத்தின் வழக்கறிஞர் எம்.ரவியைத் தொடர்பு கொண்டபோது, அடுத்த வாரம் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.
“அலட்சியம் மற்றும் வேண்டுமென்றேப் புறக்கணிக்கப்பட்டதற்காக ஏஜி (வோங்) மீது வழக்குத் தொடரக் குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு அறிவுறுத்தல் கிடைத்தது.
“நாகேந்திரனின் மனநலம் பற்றி அவர்களுக்குத் தெரிவித்த பிறகு, அவர்கள் வழக்கை நிறுத்திவிட்டு, ‘சரி, நான் யாரையாவது சரிபார்க்கச் சொல்கிறேன்’ என்று கூறியிருக்க வேண்டும்.
“மனித உயிர்களை வேண்டுமென்றேப் புறக்கணிக்கும் சூழல் அங்கு உள்ளது. நாங்கள் வழக்குத் தொடருவோம், நாகேந்திரன் மற்றும் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு கோருவோம்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூருக்கு ஹெராயின் தயாரிக்கப் பயன்படும் 42.72 கிராம் டயமார்பைன் போதைப்பொருளைக் கடத்தியதற்காக, 2011 -ஆம் ஆண்டு நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நாகேந்திரனின் ஐகியூ, சராசரியை விட குறைவாக 69 மட்டுமே இருந்ததால், இலேசான அறிவுசார் குறைபாடு கொண்ட அவருக்கு உரிய நடைமுறை மறுக்கப்பட்டது என்று வழக்கறிஞர் வாதிட்டார்.
இருப்பினும், சிங்கப்பூர் அரசாங்கம் வேறுவிதமாக நினைக்கிறது.
அண்மைய வாரங்களில், அவரது மனநலம் இன்னும் மோசமடைந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
நாகேந்திரன் தற்போதைய சூழ்நிலையைப் “புரிந்து கொள்ள” முடியாமல் இருப்பதைக் கண்டதால், குடும்பத்தினர் அந்த அறிவுறுத்தல்களைக் கேட்டதாக ரவி மலேசியாகினியிடம் கூறினார்.
33 வயதான அவர், நவம்பர் 10 -ஆம் தேதி தூக்கிலிடத் திட்டமிடப்பட்டார், ஆனால் ரவி அரசியலமைப்பு சவாலைத் தாக்கல் செய்த பின்னர், நவம்பர் 8 -ஆம் தேதி தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
நாகேந்திரனுக்குக் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானதால், அவர் குணமடைந்த பிறகும், மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரது வழக்கை விசாரித்து, தடை விண்ணப்பத்தை நீட்டித்தது.
அவர் தற்போது சிகிச்சை பெற்று, சாங்கி சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு?
இதற்கிடையில், சிங்கப்பூர் ஏஜி அலுவலகம் (ஏஜிசி) ரவியிடம் “நீதிமன்ற அவமதிப்பு” என்று கூறப்படும் இரண்டு முகநூல் பதிவுகளை நீக்க வேண்டும் என்று கோரியது.
வீடியோ பதிவு தொடர்பான பதிவுகளில் ஒன்று, நவம்பர் 5 அன்று நாகேந்திரன் வழக்கு குறித்து ரவி கருத்து தெரிவித்திருந்தது, முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மற்றொரு பதிவு, ஒரு தனி சட்ட வழக்கு பற்றி எழுதப்பட்ட குறிப்பு.
சிங்கப்பூர் ஏஜிசி, அவர் அந்தப் பதிவை நீக்கி, எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டு, அதனை நவம்பர் 22, மாலை 5 மணிக்கு அவரது முகநூலில் பதிவேற்ற வேண்டுமென கோரினார்.
மலேசியாகினி பார்த்த நவம்பர் 17 தேதியிட்ட கோரிக்கை கடிதம், இந்த நடவடிக்கை அவருக்கு எதிராக எடுக்கப்படும் “மற்ற சட்டத் தீர்வுகளுக்குப் பாரபட்சம் இல்லாமல்” செய்யப்பட்டது என்று கூறியது.
வழக்கறிஞருக்கு அழுத்தம்
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ரவி, வீடியோவில் நீதிமன்ற அவமதிப்பு கருத்துகளைக் கூறியதாகச் சொல்வதை மறுத்தார், மேலும் தனது பதிவை நீக்கவும் அவர் மறுத்தார்.
சிங்கப்பூர் ஏஜிசி கடிதம் தனக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி என்றும், நாகேந்திரனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து தான் விலகுவதற்கான நெருக்குதல் என்றும் அவர் விவரித்தார்.
“எனது கவலை என்னவென்றால், சர்வதேச எதிர்வினையின் காரணமாக, அவர்கள் உண்மையில் எனக்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறார்கள், நான் இந்த வழக்கிலிருந்து விலக வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் ஏஜிசியின் கோரிக்கைகளுக்குத் தான் இணங்கப் போவதில்லை என்றார் ரவி.
நாகேந்திரனின் மரணதண்டனை மற்றும் மன நிலை மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சர்வதேச அளவில் மரண தண்டனைக்கு எதிரான குழுக்கள், மனித உரிமைகள் மற்றும் சட்டப் பயிற்சியாளர்களிடமிருந்து எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது.
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் நாகேந்திரனைத் தூக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வழக்கு வைஸ் (Vice), சிஎன்என் (CNN), தி வாஸிங்டன் போஸ்ட் (The Washington Post), தி சிட்னி மோர்னிங் ஹேரல்ட் (The Sydney Morning Herald), அல் ஜசீரா (Al Jazeera) மற்றும் அசோசியேட் பிரஸ் (Associated Press) போன்ற சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.