மலாக்கா பிஆர்என் | மசீச பொதுச்செயலாளர் சோங் சின் வூன், மலாய் முஸ்லிம் வாக்காளர்களின் இதயங்களைப் பாதுகாக்க மலாக்கா கிறிஸ்துவ தேவாலயத்தின் படத்திலிருந்து சிலுவைச் சின்னத்தை டிஏபி அகற்றியதாகக் கூறினார்.
இருப்பினும், முகநூலில் படத்தை வெளியிட்ட சீன மொழி டிஏபி பத்திரிக்கையான தி ராக்கெட், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கெட்டி இமேஜ்ஜஸ் (Getty Images) பட வங்கி சேவையான ஐஸ்தோக் -இலிருந்து (iStock) அந்தப் புகைப்படத்தை வாங்கியதால் இந்தத் தவறு ஏற்பட்டதாகக் கூறியது.
சோங், ஒரு தனி முகநூல் பதிவில், டிஏபியை “யூனக்ஸ்” (eunuchs – பேரரசரின் காமக்கிழத்திகளாக மாறிய ஆண்மை இழந்தவர்கள்) என்று குற்றம் சாட்டினார்.
“வாக்குகளைப் பெற, டிஏபி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் மலாக்காவில் உள்ள பிரபலமான அடையாளங்களில் இருந்து சிலுவையை அகற்ற முடிகிறது.
“இது அவர்களது பாதுகாப்பற்ற மனநிலையைப் பிரதிபலிக்கிறது. சிலுவை முஸ்லிம் மலாய்க்காரர்களின் ஆதரவைப் பாதிக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
“டிஏபி ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் பற்றி தைரியமாகப் பேசுகிறது, ஆனால் உண்மையில் அது ஒரு ‘யூனக்ஸ்’ என்று சோங் கூறினார்.
“மலாக்கா கிறிஸ்து சர்ச் 1753” என்ற வார்த்தைகளுடனும் சிலுவையின் சின்னத்துடனும் மலாக்கா நகரின் அடையாளச் சின்னமாகப் பிரதிபலிக்கும் வகையில் ராக்கெட் அப்படத்தைப் புதுப்பித்தது.
“கிறிஸ்ட் சர்ச்சின் படம் சமீபத்தில், ஐ ஸ்தோக் -இலிருந்து, கிராபிக்ஸ் பொறுப்பில் இருந்த ஒரு சக ஊழியரால் வாங்கப்பட்டது, பணம் செலுத்திய அசல் படத்தில் தேவாலயத்தின் பெயர் மற்றும் சிலுவை இல்லை என்பதை அவர் அறியவில்லை.
“உண்மையில் இது ஒரு தவறு, தயவுசெய்து எங்களை மன்னியுங்கள்,” என்று ராக்கெட் ஒரு முகநூல் பதிவில் கூறியுள்ளது.
நவம்பர் 21-ம் தேதி நடக்கவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் வாக்களிக்க வருமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்க, இந்தப் படம் சுவரொட்டி பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டது.
சுவரொட்டி, “ஐந்தாண்டுகள் நீடிக்கும் ஒரு முடிவுக்காக, ஒரு நாள் வீட்டிற்குச் செல்லுங்கள்” என்று சீன மொழியில் எழுதப்பட்டிருந்தது.