தலைநகரில் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிலம் மற்றும் வீடுகளுக்கு விண்ணப்பித்ததை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஒப்புக்கொண்டார்.
எனினும், இந்த விண்ணப்பம் ‘பரிசு’ அல்ல என்றும், 2003 -ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியச் சட்டம் 1980 -இன் கீழ், அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் வழங்கப்படும் சாதாரண பரிசு என்றும் நஜிப் கூறினார்.
நேற்று, மக்களவையில், சொத்தைக் கையகப்படுத்துவதற்கான விண்ணப்பம் பற்றி பெஜுவாங் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் எழுப்பிய பிரச்சினை குறித்து முகநூல் பதிவு ஒன்றில் நஜிப் கருத்து தெரிவித்தார்.
“அவர் (மகாதீர்) 4 -வது பிரதமராக இருந்தபோது, அவரே அச்சட்டத்தில் திருத்தம் செய்தார். அவர் திருத்தியச் சட்டத்தில் உள்ளபடி ஜிஇ14 -க்குப் பிறகு மட்டுமே எனது அலுவலகம் ஒரு குடியிருப்பை வழங்குமாறு கேட்டது.
“அரசாங்கம் எனக்கு மூன்று நிலங்களைத் தேர்வு செய்ய கொடுத்தது, அதில் நான் ஒன்றைத் தேர்வு செய்தேன். அது இன்றைய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. நான் அரசாங்கத்திடம் இருந்து 100 மில்லியன் ரிங்கிட் பரிசாக கேட்கவில்லை, அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் வழங்கியது போல் ஒரு வீடு கேட்கிறேன்,” என்று அவர் சொன்னார்.
உண்மையில், தான் தங்கியிருக்கும் முன்னாள் பிரதமர் அலுவலகம், புக்கிட் பந்தாயில் உள்ள ஒரு வாடகை பங்களா மட்டுமே என்று நஜிப் கூறினார்.
“இது மகாதீரின் முதன்மையான தலைமைத்துவ அறக்கட்டளைப் போன்ற பெரிய வளாகம் அல்ல. எனது பிள்ளைகள் அவரது பிள்ளைகளைப் போல் கோடீஸ்வரர்கள் அல்ல.
“அப்படியானால், பிரதமராக எனது சேவைகள் என்ன என்று மகாதீர் கேட்டுள்ளார், எனது சேவைகள் எதுவும் இல்லை,” என்று அவர் கிண்டலாக பதில் கூறினார்.
அந்த இடுகையில், நஜிப் 2008 முதல் 2010 வரையிலான “உலகளாவிய மந்தநிலையில்” இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது உட்பட, நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைகளின் நீண்டப் பட்டியலை எழுதினார்.
“நான் பிரதமராக இருந்தபோது ஆசியான் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருந்தது. வெளிநாட்டு முதலீட்டின் மொத்த மதிப்பு, நான் பிரதமராக இருந்த காலத்தில், வரலாற்றில், அண்டை நாடுகளிலேயே மிக அதிகமாக இருந்தது.
“நான் பிரதமராக இருந்த 2008 முதல் 2017 வரையில், நாட்டின் சொத்துக்கள் RM1.2 டிரில்லியன் அதிகரித்துள்ளது, RM800 பில்லியனில் இருந்து RM2 டிரில்லியனாக.
“நஜிப்பின் கீழ் நாடு திவாலாகிவிட்டது என்று பலமுறை பொய் சொன்னாலும், 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகாதீரே இதை ஒப்புக்கொண்டார்,” என்று அவர் கூறினார்.