கெடாவில் 4டி எண்கள் மீதான தடை இறுதியானது – எம்பி

கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி நோர், மாநிலத்தில் 4டி எண் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான தனது முடிவு இறுதியானது என்று கூறினார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், அது “இறுதியானது” என்றார்.

4டி எண் கடையின் வணிக உரிமத்தைப் புதுப்பிக்காத மாநில அரசின் முடிவை மறுபரிசீலனைச் செய்யத் தேவையில்லை என்று சனுசி கூறினார்.

“எதற்காக கலந்துபேச வேண்டும்? இது இவ்வளவு காலமாக நடந்து வருகிறது. அதனுடைய மோசமான விளைவுகள் நமக்கு தெரியும்.

“சீனர்களுக்கும் மோசமான விளைவுகள் தெரியும் என்பது எனக்குத் தெரியும். இது சீன சமூகத்தின் விஷயம் என்று நான் சொல்லவில்லை.

“கெடாவில், மலாய்க்காரர்களும் இருக்கிறார்கள், அது நோயாக மாறுகிறது, சயாமியர்களும் இருக்கிறார்கள், இந்தியர்களும் இருக்கிறார்கள், சீனர்களும் இருக்கிறார்கள்.

“முஸ்லிம் அல்லாதவர்களின் விஷயங்களில் நான் தலையிடவில்லை,” என்று அவர் கூறினார்.

இன, மத வேறுபாடின்றி கெடா சமூகத்தினர் சூதாட்டப் பழக்கமின்றி அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ முடியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

4டி எண் சூதாட்டத்தைத் தடை செய்வதைத் தவிர, அனைத்து வளாகங்களிலும், குறிப்பாகத் தேவை இல்லாத கிராமப்புறங்களில் மது விற்பனையைக் கட்டுப்படுத்தவும் கெடா முடிவு செய்தது.

எவ்வாறாயினும், கெடாவில் உள்ள முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகளைச் சனுசி கட்டுப்படுத்த முயற்சிப்பதாக சில அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.