அரசாங்கம் நஜிப்பிடம் பணம் கேட்க வேண்டும், RM100 மில்லியனைக் கொடுக்கக் கூடாது – கிட் சியாங்

100 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ‘சொத்தைக்’ கொடுப்பதற்குப் பதிலாக, அந்த முன்னாள் பிரதமரின் “கட்டுப்பாட்டில் இன்னும் உள்ள” பணத்தைத் திருப்பித் தருமாறு புத்ராஜெயா கோரியிருக்க வேண்டும் என்று டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மலேசியாவுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய நஜிப்புக்கு, வீடு மற்றும் நிலம் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் RM100 மில்லியன் மக்கள் பணத்தை எந்தவொரு நல்ல மனிதரும் ஆதரிக்கத் தயாராக இல்லை என்று லிம் வலியுறுத்தினார்.

1எம்டிபி பிரச்சினை மற்றும் பிற ஊழல்கள் காரணமாக, நாட்டிற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

“அவரது வீட்டிற்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்குவதற்குப் பதிலாக, அவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பில்லியன் கணக்கான ரிங்கிட்டைத் திருப்பித் தருமாறு அரசாங்கம் நஜிப்பிடம் கோர வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நஜிப்பிடம் இருந்து 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிலம் மற்றும் வீட்டு வசதிக்கான விண்ணப்பம் அமைச்சரவைக்கு வந்துள்ளது என்பதை நேற்று நிதி அமைச்சர் ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் உறுதிப்படுத்தினார்.

இந்த நடவடிக்கையால், செப்டம்பர் 13 அன்று, பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (எம்ஓயு) எதிர்க்கட்சி மறுபரிசீலனைச் செய்ய வேண்டிவரும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமை வலியுறுத்த இது தூண்டியது.

நஜிப்பின் விண்ணப்பம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படாத வரையில், ஒரு சென் அரசுப் பணத்தைக் கூட செலவு செய்யக் கூடாது என்று உறுதியளிக்க வேண்டும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கத்திடம் லிம் கூறினார்.

பகுத்தறிவு எண்ணம் கொண்ட தேசியக் கூட்டணி (தேகூ) மற்றும் தேசிய முன்னணி (தேமு) எம்பிக்களையும் இவ்வளவு மக்கள் பணத்தை நஜிப்புக்காக பயன்படுத்தும் முன்மொழிவு வெறுப்படையச் செய்யும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில், இஸ்மாயில் சப்ரியுடன் கூட்டணி எட்டியப் புரிந்துணர்வுகளை மறுபரிசீலனைச் செய்ய எண்ணம் கொண்டுள்ள பிஎச்-க்கு லிம் தனது ஆதரவையும் தெரிவித்தார்.