மலாக்கா மாநிலத் தேர்தல் (பிஆர்என்) வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது, 217 வாக்குச் சாவடி மையங்கள் திறக்கப்பட்டன, இதில் 1,109 பிரிவுகள் மலாக்கா மக்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றன.
மொத்தமுள்ள 495,195 வாக்காளர்களில், 476,037 சாதாரண வாக்காளர்களை உள்ளடக்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 5.30 மணிக்கு நிறைவுறும். 12,290 தேர்தல் அதிகாரிகள், 28 மாநிலச் சட்டமன்ற இடங்களிலும் பணியில் உள்ளனர்.
மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இன்று காலை வானிலை மலாக்கா தெங்கா, ஜாசின் மற்றும் அலோர் காஜா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தெளிவாக இருக்கும் என்றும், மாலையில் அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோயின் அச்சுறுத்தலை இன்னும் எதிர்கொள்ளும் ஒரு நாட்டில் பிஆர்என் நடத்தப்படுவதால், வாக்காளர்கள் சமூக இடைவெளி, முகக்கவரி, கை சுத்திகரிப்புப் பயன்படுத்துதல், உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் செந்தர இயங்குதல் நடைமுறைகளைக் (எஸ்.ஓ.பி.) கடைப்பிடிக்குமாறும், வாக்குச்சாவடிக்குள் நுழைவதற்கு முன் மைசெஜாத்திரா விரைவு பதில் குறியீடுகளை (QR) ஸ்கேன் செய்வதன் மூலம் வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
நோய் அறிகுறிகள் அல்லது உடல் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும் வாக்காளர்கள், சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் சிறப்பு கூடாரங்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்; மேலும் பரிசோதனை மற்றும் மேல் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்படுவார்கள்.
கட்சி முகவர்கள் அல்லது தங்கள் கடமைகளை முடித்த வேட்பாளர்கள் அல்லது வாக்களித்து முடித்த வாக்காளர்கள் உடனடியாக வாக்குச் சாவடியை விட்டு வெளியேற வேண்டும்.
நவம்பர் 16 அன்று, இராணுவ வீரர்கள் மற்றும் அவர்தம் மனைவிகள் மற்றும் காவல் துறையினர் என மொத்தம் 11,557 பேர் ஆரம்பகட்ட வாக்காளர்களாக, 47 பிரிவுகள் கொண்ட 31 ஆரம்ப வாக்குப்பதிவு மையங்களில் தங்கள் பொறுப்புகளை முடித்துள்ளனர். 7,601 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மலாக்கா பிஆர்என்-க்கான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 248, பிரிவுகள் 1,156 ஆகும்.
மலாக்கா பிஆர்என்-இல், தேசிய முன்னணி (தேமு), தேசியக் கூட்டணி (தேகூ), பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்), பார்ட்டி பூமிபுத்ரா பெர்காசா மலேசியா (புத்ரா), பார்ட்டி பெரிகாத்தான் இந்தியா முஸ்லீம் நேஷனல் (இமான்) மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 112 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
பேச்சுக்கள், விரிவுரைகள், நேருக்கு நேர் பிரசாரங்கள், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம், நடைபயணம் மற்றும் துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் விளம்பரத்துடன் வாகனங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் சூழ்நிலையில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
- பெர்னாமா