காவலில் கைதி மரணம் : பிரேதப் பரிசோதனை முடிவுக்காகப் போலீஸ் காத்திருக்கிறது

தடுப்புக் காவல் மரணம் மற்றும் அதிகார அத்துமீறலை நீக்குக மனித உரிமைகள் குழு (ஏடிக்ட்) கிளந்தான், கோத்தா பாருவில், தடுப்புக் காவலில் சம்பவித்த மரணம் காவல்துறையினரின் அதிகார அத்துமீறலினால் ஏற்பட்டது என்று கூறியுள்ளது.

பெயர் வெளியிடப்படாத அக்கைதி, சில நாட்களுக்கு முன்பு, கோத்தா பாரு மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதன் விளைவாக, நவம்பர் 16-ஆம் தேதி இறந்ததாக எடிக்ட் குற்றம் சாட்டுகிறது.

முகமட் நோர்ஷாஃப்ரீசன் ஜஸ்லான்

கிளந்தான் குற்றப் புலனாய்வுத் துறை துணைத் தலைவர் ரோட்னி பாஸ்லா ஹரிஸைத் தொடர்பு கொண்டபோது, ​​இந்த வழக்கு திடீர் மரணமாக விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆய்வக நோயியல் அறிக்கை முடிவடையும் வரை மரணத்திற்கான காரணத்தை அறிய காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த வாரம், கிளந்தான், பச்சோக்கில், போலீஸ் காவலில் இருந்தபோது கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்படும் முகமட் நோர்ஷாஃப்ரீசன் ஜஸ்லான், 27, வழக்கை எடிக்ட் எடுத்துக்காட்டியது.

கைது செய்யப்பட்ட நோர்ஷாஃப்ரீசனை அடிக்கவில்லை என மறுத்த போலிசார், அவரைக் கைது செய்ய போலிசார் நடவடிக்கை எடுத்த போது கைகலப்பு ஏற்பட்டதை ஒப்புக்கொண்டனர்.

வெளிப்படைத்தன்மை தேவை

மனித உரிமைக் குழுக்கள் சமீபத்திய ஆண்டுகளில், தடுப்புக்காவலில் அதிகரித்துவரும் மரணங்களின் எண்ணிக்கையை எடுத்துரைத்து வருகின்றன.

சுஹாகாம் ஆணையர் ஜெரால்ட் ஜோசப்

கடந்த மாதம், மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) 2020 -ஆம் ஆண்டில் மட்டும் தடுப்புக்காவலில் 456 இறப்புகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் 363 மரணங்களும், குடிவரவுத் துறை திணைக்களத்தில் 50 மரணங்களும், போலிசாரால் 34 மரணங்களும், தேசியப் போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனத்தில் (AADK) ஒன்பது இறப்புகளும் பதிவுசெய்யப்பட்டதாக சுஹாகாம் ஆணையர் ஜெரால்ட் ஜோசப் தெரிவித்தார்.

தடுப்புக் காவலில் நேர்ந்த மரணங்களுக்கு, வழக்கத்தைப் போல் சுகாதாரக் குறைபாடுகள் முக்கியக் காரணமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு இந்த இறப்பு எண்ணிக்கைக்குக் கோவிட்-19 தொற்றும் பங்களித்துள்ளது.

இதற்கிடையில், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியா (திஐ-எம்) மரணம் குறித்து விசாரிக்க அரச விசாரணை ஆணை (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என்று கோரியது.

திஐ-எம் தலைவர் முஹம்மது மோகன்

“சில அழுகிய ஆப்பிள்கள் ஒரு கூடையை நாசமாக்குகின்றன” என்றக் காரணத்தை மக்களால் இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது – மீண்டும் மீண்டும் நீதி அத்துமீறப்படுவதற்கு என்ன காரணம் என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும்,” என்று திஐ-எம் தலைவர் முஹம்மது மோகன் கூறினார்.

“எங்களைப் பாதுகாப்பதற்காக ஒப்படைக்கப்பட்ட சட்ட அமலாக்க நிறுவனங்களின் தெளிவற்ற மற்றும் சீரற்ற நடைமுறைகள் நிலைமைக்கு உதவாது.

“எனவே, உள்துறை அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட தடுப்புக்காவலில் நேர்ந்த மரணங்கள் குறித்து அரச விசாரணை ஆணையத்தைத் தொடங்குமாறு திஐ-எம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது,” என்றார் அவர்.