இரவு 10.05 : மலாக்கா பிஆர்என்-இல், தேசிய முன்னணி (தேமு) வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் (இசி) அறிவித்தது.
“ஒட்டுமொத்த முடிவுகளின்படி, இரவு 9.42 மணி நிலவரப்படி, தேமு 28 இடங்களில் 15 இடங்களை வென்று, பெரும்பான்மையைப் பெற்றது,” என்று அயேர் கெரோவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இசி தலைவர் அப்துல் கானி சலே கூறினார்.
தேசியக் கூட்டணி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது
இரவு 9.55 : பெம்பான் மற்றும் சுங்கை ஊடாங் மாநிலத் தொகுதிகளில் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றது.
35 வயதான டாக்டர் அலீஃப் யுசோஃப், தேமு-இன் கோட்டையான சுங்கை ஊடாங்கில் 43.9 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
அந்த பெர்சத்து உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.
முகமட் யாட்சில் யாகூப், 35 விழுக்காடு வாக்குகள் பெற்று, தேமு வேட்பாளர் கோ சின் ஹானைத் தோற்கடித்தார்.
தேமு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது
இரவு 9.50: மலாக்கா மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் தேகூ மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது.
இதற்கு முன்னர், 28 இடங்களில் 13 இடங்களை மட்டுமே பெற்றிருந்த அக்கூட்டணிக்கு இது மிகப்பெரிய சாதனை.
அந்தப் பெரும்பான்மையுடன், நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாநில சட்டசபையில் ஐந்து கூடுதல் இடங்களை உருவாக்க உறுதியளித்ததுபோல், தேமு அரசாங்கம் மாநில அரசியலமைப்பைத் திருத்தலாம்.
தேமு அலைக்கு பின்னால், அட்லி தனது வெற்றியைப் பாதுகாத்தார்
இரவு 9.45 : மலாக்கா பிஎச் தலைவர் அட்லி ஜஹாரி, அதிகாரப்பூர்வமாகப் புக்கிட் கட்டில் வெற்றியை 1,057 வாக்குகள் பெரும்பான்மையுடன் பாதுகாத்தார்.
அவர் சட்டமன்ற அமர்வில் அமானாவின் ஒரே பிரதிநியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அமானாவுக்கு மலாக்காவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
மலாக்கா மாநில டிஏபி & பெர்சத்து தலைவர்கள் தோல்வியடைந்தார்
இரவு 9.40 : மலாக்கா பெர்சத்து தலைவர் முகமட் ரஃபீக் நைசாமோஹிதீன் தெலோக் மாஸில் தோல்வியடைந்தார்.
அதிகாரப்பூர்வமற்ற கணக்குகளின்படி, அவர் 28 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
2018 பொதுத் தேர்தலில், பிஎச் அங்கு 44.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த நேரத்தில், ரஃபீக்கும் பெர்சத்துவும் பிஎச் -இன் ஒரு பகுதியாக இருந்தனர்.
மலாக்கா டிஏபி தலைவர் தெய் கோக் கியூ பெம்பானில் தோல்வியடைந்தார்.
அங்கு பிஎச் பெற்ற வாக்குகளும், 2018 பொதுத் தேர்தலில் 45.4 விழுக்காட்டிலிருந்து 26.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
பிஎச் தோல்வியை ஒப்புக்கொண்டது
இரவு 9.25 : பிஎச் தனது தோல்வியை ஒப்புக்கொண்டது, பிஆர்என் -இல் வெற்றி பெற்றதற்கு தேசிய முன்னணியை அது வாழ்த்தியது.
மலாக்கா பிஎச் தலைவர் அட்லி ஜஹாரி, அவர்கள் தோல்விக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக குறைந்த வாக்குப்பதிவைக் குறிப்பிட்டார்.
“ஆரம்பத்தில் இருந்தே, நாங்கள் அனைவருக்கும் அறிவித்துள்ளோம், 70 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வாக்குப்பதிவு (விழுக்காடு) செய்தால் மட்டுமே பிஎச்-க்கு வாய்ப்பு உள்ளது,” என்று அவர் பிஎச் -இன் பிரதான செயல்பாட்டு அறையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பிஎச் தலைவர்கள் மேலும் எதனை மேம்படுத்தலாம் என்பதை அடையாளம் காண, மீளாய்வுகள் நடத்தப்படும் என்று கூறினார்.
தேகூ முதல்வர் வேட்பாளரைத் தோற்கடித்ததாக தேமு கூறுகிறது
இரவு 8.10 மணி : அயேர் கெரோவில் உள்ள தேசிய முன்னணி (தேமு) செயல்பாட்டு மையத்தின் வாக்கு எண்ணிக்கை பலகையின் படி, அக்கூட்டணி தஞ்சோங் பிடாரா தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டது.
தஞ்சோங் பிடாரா மாநிலத் தொகுதிக்கான இரண்டு முக்கியப் போட்டியாளர்கள் மலாக்கா தேமு தலைவர் அப்துல் ரவூஃப் யூசோ மற்றும் தேசியக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் ஆவார்கள்.
அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின் அடிப்படையில், ரவூஃப் மெலிதான பெரும்பான்மையில் மாஸ் எர்மியாத்தியைத் தோற்கடிக்க வாய்ப்புள்ளது.
பிஎச் வேட்பாளர் ஜைனல் ஹசான் வைப்புத் தொகையை இழக்க வாய்ப்புள்ளது.
அதிகாரப்பூர்வமற்றது : சுங்கை ஊடாங்கில், தேமு கோட்டையில் தேகூ வாக்குகள் உயர்ந்தன
இரவு 7.25 : தேசிய முன்னணி (தேமு) கோட்டையான தெரெண்டாக் மற்றும் சுங்கை ஊடாங் இராணுவ முகாம்களைக் கொண்ட சுங்கை ஊடாங்கில், தேசியக் கூட்டணி (தேகூ) முன்னிலை வகிக்கிறது.
அந்த இருக்கை அம்னோ-தேமு பாரம்பரிய இருக்கையாகும்.
அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின் அடிப்படையில், தேமு-இன் 3,508 வாக்குகளுடன் ஒப்பிடுகையில், தேகூ இதுவரை 4,589 வாக்குகளைச் சேகரித்துள்ளது. பிஎச் 674 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
2018 பொதுத் தேர்தலில், தேமு 56.22 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
முழு மாநிலத்திலும், முன்கூட்டிய வாக்காளர்களிப்பில் மிகப் பெரிய பங்கைக் கொண்ட தொகுதியான இதில், பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 42 விழுக்காடாகும்.
அதிகாரப்பூர்வமற்றது : மச்சாப் ஜெயா, பெங்கலான் பத்துவில் தேமு மற்றும் பிஎச் இடையே மோதல்
இரவு 7 மணி : கெலேபாங்கைத் தவிர, மச்சாப் ஜெயா மற்றும் பெங்கலான் பத்து ஆகிய இடங்களிலும் தேமு மற்றும் பிஎச் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
மச்சாப் ஜெயாவில், 32 வாக்குச் சாவடிகளில் 15 -இல், பிஎச் 1,475 வாக்குகளைப் பெற்ற நிலையில், தேமு 1,440 வாக்குகளையும் தேகூ 585 வாக்குகளையும் பெற்றுள்ளன.
பெங்கலான் பத்துவில், 48 வாக்குச் சாவடிகளில் ஏழு -இல், பிஎச் 708 வாக்குகளையும் மற்றும் தேமு 534 வாக்குகளையும் பெற்று முன்னணியில் உள்ளன. தேகூ 212 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளது.
அந்தத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய சுயேட்சை வேட்பாளருமான நோரிசாம் ஹசான் பக்தீ 67 வாக்குகளும், பார்ட்டி பூமிபுத்ரா பெர்காசா மலேசியா (புத்ரா) ஒன்பது வாக்குகளும் பெற்றனர்.
இதுவரையிலான முடிவுகள், நோரிசாம் தனது இடத்தைப் பாதுகாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதைக் காட்டுகிறது.
டிராக்கில் ‘அதிகாரப்பூர்வமற்ற’ முடிவுகளை தேமு காட்டுகிறது
மாலை 6.55 : அயேர் கெரோவில் உள்ள அதன் முக்கியச் செயல்பாட்டு அறைக்கு அருகில், ஒரு டிராக்கில் நிறுவப்பட்ட திரை மூலம் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளைத் தேமு காட்டுகிறது.
ஏறத்தாழ 400 பேர் சுற்றிநின்று, திரையில் முடிவுகளைக் கண்டுவருகின்றனர்.
அதிகாரப்பூர்வமற்றது : பாரம்பரிய இருக்கைகளில் பிஎச் முன்னிலை
மாலை 6.50 : பக்காத்தான் ஹராப்பானின் பாரம்பரிய தொகுதிகளான பண்டார் ஹிலிர் மற்றும் கோத்த லக்சமானாவில் டிஏபி முன்னிலை வகிக்கிறது.