மலாக்கா பிஆர்என் : பெரிய அளவில் தோற்றவர்களும் வென்றவர்களும்  

நேற்று நடைபெற்ற மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) அம்னோ மற்றும் அதன் கூட்டணியான தேசிய முன்னணியின் (தேமு) அமோக வெற்றியைத் தொடர்ந்து, மலாக்கா மாநிலம் பல ஆச்சரியங்களைப் பதிவு செய்தது.

இது 2018 பொதுத் தேர்தலுக்குப் (ஜிஇ)  பின், பிஆர்என்-இல் கிடைத்த மிக முக்கியமான வெற்றியாகும், மேலும் இது மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

பிஆர்என் -இன் முடிவுகள் நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை மலேசியாகினி ஆராய்ந்தது.

வெற்றியாளர்கள் – நஜிப் மற்றும் ஜாஹித்

சபாவில் பெரிய வெற்றியும், அதைத் தொடர்ந்து மலாக்காவில் கிடைத்த பெரிய வெற்றியும், இரண்டு அம்னோ பிரமுகர்கள் – அதன் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் தேமு ஆலோசகர் நஜிப் ரசாக் – ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், தங்கள் புகழைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இந்த இரண்டு முக்கியமான தேர்தல்களின் இயக்க விசை, புத்ராஜெயாவில் தேமு-இன் அடுத்த வெற்றியை உறுதிசெய்ய அவர்கள் இருவருக்குமே ஊக்கமாக இருக்கும்.

நஜிப் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு, RM100 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்து சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.

ஜாஹிட்டைப் பொறுத்தவரை, அவர் தனது தலைமைத்துவம் பலனளிக்கத் தொடங்கியுள்ளது என்பதை இப்போது காட்ட முடிந்தது. தேசியக் கூட்டணியுடன் (தேகூ) ஒத்துழைக்க வேண்டும் என்று முன்பு அழைப்பு விடுத்திருந்த அம்னோ உச்சமன்றக் குழுவில் உள்ள சிலரை இது பாதிக்கலாம்.

தோல்வியாளர் – அன்வர் இப்ராஹிம்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், தனது அரசியல் வாழ்க்கையில் மிக மோசமான நிலையைப் பதிவு செய்தார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில், அவர் பிரதமர் வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் “ஷெரட்டன் நகர்வு” இறுதியில் அவரை எதிர்க்கட்சித் தலைவராக்கியது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில், புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கு “வலுவான மற்றும் உறுதியான” பெரும்பான்மை இருப்பதாக அன்வார் கூறியது உண்மையாகாததால் அவர் மிகவும் சங்கடப்பட்டார்.

மலாக்கா பிஆர்என்-க்கு முன்னால், அன்வார் தனது கூட்டணிக் கட்சியான டிஏபி-யிடமிருந்து எச்சரிக்கைகளைப் பெற்ற போதிலும், பிஎச் ஓர் “அரசியல் தவளையை” வேட்பாளராக ஏற்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

மலாக்கா பிஆர்என் -இல், பிகேஆர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த தேர்தலின் போது அடித்தட்டு மக்களுக்கு அன்வார் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

தோல்வியாளர் – அப்துல் ஹாடி அவாங்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், இதுவரை சோதனை செய்யப்படாத தேகூ-க்கு ஆதரவாக, அம்னோவுடனான தேசிய ஒருமித்த ஒத்துழைப்பை கைவிடுமாறு தனது கட்சியைச் சமாதானப்படுத்தினார்.

பாஸ் கட்சியில் அம்னோ ஆதரவு தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன, ஆனால் கட்சியின் சமீபத்திய தலைமைத் தேர்தலின் போது அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

அப்துல் ஹாடி அம்னோவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முயன்றால், அதில் அவர் பலவீனமான நிலையிலேயே இருக்கிறார்.

தோல்வியாளர் – இட்ரிஸ் ஹரோன்

இட்ரிஸ் ஹரோன், முதலமைச்சர் சுலைமான் அலிக்கான தனது ஆதரவைத் திரும்பப் பெற்றிருக்காவிட்டால் இந்த பிஆர்என் நடந்திருக்காது.

மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற இலட்சியத்துடன், கட்சி மாறிய இட்ரீஸின் வியூகம் நிறைவேறவில்லை.

இட்ரிஸின் அரசியல் வாழ்க்கை வெகுவாக உயர்ந்தது, அவர் ஒருமுறை கூட்டாட்சி மட்டத்தில் துணை அமைச்சராகவும் இருந்தார்.

இப்போது, ​​2004 -க்குப் பிறகு முதல்முறையாக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இல்லை அல்லது கட்சியில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை.

55 வயதில், இட்ரிஸ் அரசியலில் இன்னும் புதியவரைப் போலவே இருக்கிறார், ஆனால் இந்த நேரத்தில், அவர் மீண்டும் எழ வேண்டும்.