விமர்சனம் | பிகேஆரின் மாபெரும் தோல்வி உட்பட, மலாக்காவில் பக்காத்தான் ஹராப்பானின் (பிஎச்) தோல்வி அன்வார் இப்ராஹிமின் தலைமைக்கு எதிரான மக்களின் தெளிவான வாக்கெடுப்பு ஆகும்.
“வலுவான மற்றும் உறுதியான பெரும்பான்மையை” பெறுவதற்கான முயற்சியின் இறுதியில், கேள்விக்குரிய முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதை அன்வார் மீண்டும் மீண்டும் காட்டியுள்ளார்.
அதைவிட மோசமானது, மக்கள் ஆணையை மீட்டெடுக்க வேண்டும் என்ற சாக்கில் கட்சி தாவிய அரசியல்வாதிகள் மீது அவர் எடுத்த நடவடிக்கையை அவர் நியாயப்படுத்தியது.
அன்வார் தனது சொந்த கட்சி மற்றும் கூட்டணியின் விமர்சனங்களைக் கேட்க விரும்பவில்லை என்றால், அவர் வாக்காளர்களின் குரலுக்குச் செவிசாய்கவே வேண்டும்.
2018 -இல் வென்ற மாச்சாப் ஜெயா, கெலேபாங் மற்றும் ரெம்பியா ஆகிய மூன்று இடங்கள் உட்பட, போட்டியிட்ட 11 இடங்களிலும் பிகேஆர் தோல்வியடைந்தது.
அசஹானில், அன்வார் இட்ரிஸ் ஹரோனை வேட்பாளராக நிறுத்தினார், பிகேஆர் தேசிய முன்னணி வேட்பாளரிடம் 2,993 வாக்குகள் பெரும்பான்மையில் தோல்வியடைந்தது.
இட்ரிஸ் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியைத் திட்டமிட்டு, திடீர் தேர்தல் நடைபெறத் தூண்டினார். முன்னதாக, இந்த நடவடிக்கையை இட்ரிஸ் பிஎச்-உடன் விவாதித்துள்ளார்.
டிஏபி, பிகேஆரில் உள்ள சில தலைவர்கள் மற்றும் பிஎச், பிகேஆர் இட்ரிஸை முன்னிறுத்துவதற்குக் கடுமையான எதிர்ப்பு குரல் கொடுத்தனர் (அத்துடன் அமானா களமிறக்கிய அஸ்மான் ஹசானும் தோற்றார்), ஆனால் அது புறக்கணிக்கப்பட்டது.
அன்வாரின் வாதத்தை வாக்காளர்கள் நிராகரித்தனர்
பிகேஆர் மற்றும் பிஎச்-இன் முக்கியத் தலைவரான அன்வார், கட்சி தாவிய அவர்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்ததாகக் கூறி, அவர்களை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தினார்.
மாறாக, அன்வார், இட்ரிஸை மலாக்கா பிஎச் -இன் அதிகாரத்தை மீட்டெடுக்க விரும்பிய ஒரு ஹீரோவாகச் சித்தரிக்க முயன்றதன் மூலம் இந்தச் செயலை நியாயப்படுத்தினார்.
நேற்றைய மலாக்கா பிஆர்என் முடிவு, வாக்காளர்கள் அன்வாரின் வாதத்தை ஏற்கவில்லை என்பதைத் தெளிவாக்கியுள்ளது.
பிகேஆரும் பிஎச்-உம் பல இடங்களில் கடுமையாகப் போட்டியிட்டு குறைந்த பெரும்பான்மையில் தோல்வியடைந்தன என்றே கூறலாம்.
இருப்பினும், சில வாக்காளர்கள் வாக்களிக்க முன்வராததால், சிறு இடைவெளியைச் சமாளிக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு நடந்த சபா மாநிலத் தேர்தலை விட 65.85 விழுக்காடு வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய், அரசியல் சோம்பல் அல்லது பிஎச் மீதான அதிருப்தி பற்றிய கவலைகள் எதுவாக இருந்தாலும், முன்கூட்டியே தேர்தலுக்கு வழிவகுத்த செயல்கள் அன்வார் மற்றும் பிஎச் மீது மோசமான விளைவை ஏற்படுத்தியது என்பது தெளிவாகிறது.
மாநிலங்களவைத் தேர்தலில், கூட்டணியின் தோல்விக்கு முக்கியத் தலைவரான அன்வார்தான் பொறுப்பேற்க வேண்டும்.
அவர் பதவி விலக வேண்டுமா அல்லது மேம்படுத்த வேண்டுமா, அன்வாரும் பிஎச்-உம் 15-வது பொதுத் தேர்தலில் உண்மையான வாய்ப்பைப் பெற விரும்பினால் ஏதாவது செய்ய வேண்டும்.
__________________________________________________________________________________
ஸிக்ரி கமாருல்ஸாமான், மலேசியாகினி செய்தியாளர்