பிகேஆர் இளைஞரணி உதவித் தலைவர், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவராக அன்வார் இப்ராஹிமுக்குப் பதிலாக ஒரு தலைவரை நியமிக்குமாறு, டிஏபி பிலூட் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் சென்னுக்ககுச் சவால் விடுத்தார்.
“விரல் நீட்டி, அன்வாரைப் பதவி விலகுமாறு வற்புறுத்தும் லீயின் நோக்கம் என்ன? டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா தலைவர் முகமட் சாபு ஆகியோரையும் பிஎச் தலைமையிலிருந்து விலகுமாறும் லீ வலியுறுத்துவாரா?
“ஒரு மாநிலத் தேர்தலை இழந்தது, பிஎச் -ஐ அச்சுறுத்துகிறது, பிகேஆர் இல்லாமல் ஒரு புதியக் கூட்டணியை உருவாக்கும் திட்டம் இருப்பது போல்.
“டிஏபி தலைமை அதைத்தான் விரும்புகிறது என்றால், அவர்கள் பிகேஆரை பிஎச்-இலிருந்து அகற்றலாம்,” என்று பிகேஆர் இளைஞரணி உதவித் தலைவர் எஸ் தீபன் இன்று ஓர் ஊடக அறிக்கையில் கூறினார்.
அன்வார் இப்ராஹிமுக்குப் பதிலாக, திறமையான எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரின் பெயரை லீ கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இல்லையெனில், லீ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார்.
சமீபத்திய மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) பிஎச் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்வாரை விலக வலியுறுத்தும் லீயின் அறிக்கைக்கு அவர் இவ்வாறு பதில் கூறினார்.
எதிர்கட்சிக் கூட்டணி விரைவில் ஒரு புதிய திசையையும் ஒருமித்த கருத்தையும் ஆராய வேண்டும் என்று லீ முன்பு கூறியிருந்தார்.
அவ்வாறு செய்யத் தவறினால், டிஏபி பிஎச் -ஐ விட்டு வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மலாக்கா பிஆர்என்-இல், 28 இடங்களில் 21 இடங்களில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பிகேஆர் தோற்றது. இதற்கிடையில், டிஏபி மற்றும் அமானா முறையே நான்கு மற்றும் ஓர் இடத்தை வென்றன.
தேசியக் கூட்டணி இரண்டு இருக்கைகளை மட்டுமே வென்றது.