பக்காத்தான் ஹராப்பானின் கூட்டணிக் கட்சிகளிடையே வரவிருக்கும் சரவாக் மாநிலத் தேர்தல் (பிஆர்என்) இடங்களுக்கான பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்று மாநில டிஏபி தலைவர் சோங் சியெங் ஜென் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, டிஏபி மற்றும் பிகேஆருக்கு இடையே உள்ள இடஒதுக்கீட்டை நிவர்த்தி செய்வதற்கான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) கட்சி சரவாக் பெர்சத்து (பிஎஸ்பி) உட்பட மற்ற எதிர்க்கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியது குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
82 மாநிலத் தொகுதிகளில், 47 இடங்களில் போட்டியிட முதலில் ஒப்புக்கொண்ட பிகேஆர், இப்போது 50 இடங்கள் வரை போட்டியிட கோரி வருவதாக இன்று செய்தியாளர் கூட்டத்தில் சோங் கூறினார்.
“என்னைப் பொறுத்தவரை, பிஎச் கட்சிகளுக்கு இடையிலான இருக்கை பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு, ஜனவரி 2 அன்று ஓர் உடன்பாடு எட்டப்பட்டது,” என்று அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தை அப்போதைய சரவாக் பிகேஆர் தலைவர் லேரி ஸ்ங், சரவாக் அமானா தலைவர் அபாங் ஹலில் அபாங் நைலி மற்றும் சோங் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
“ஸ்ங் கட்சியை விட்டு வெளியேறிய பிறகும், ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாகும் மற்றும் அது (ஒப்பந்தம்) பிணைக்கப்பட்டுள்ளது.
மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, அனைத்து பிஎச் கட்சிகளும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் அந்தந்த இடங்களை ஒப்படைக்க வேண்டும் என்று சோங் கூறினார்.
பிஎஸ்பி ஒரு நேர்மையான எதிர்க்கட்சியா, அல்லது பின்னர் சரவாக் கூட்டணி கட்சி (ஜிபிஎஸ்) ஆட்சிக்கு வந்தால் அக்கூட்டணிக்குத் தங்கள் ஆதரவை மாற்றக்கூடிய கட்சியா என்பதையும் பிஎச் முதலில் தீர்மானிக்க வேண்டும் என்றார் அவர்.
எனவே, பிஎச் மற்ற கட்சிகளுடன் ஒத்துழைக்கும் போது சூழ்நிலையைக் கவனிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
எவ்வாறாயினும், இந்த மாநிலத் தேர்தலில் பிஎஸ்பி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பைச் சோங் நிராகரிக்கவில்லை.
சரவாக் மாநிலச் சட்டமன்றம், நவம்பர் 3 அன்று கலைக்கப்பட்டது, யாங் டி-பெர்துவான் அகோங் மாநிலம் தழுவிய அவசர நிலையை ஒரே நாளில் இரத்து செய்ய ஒப்புக்கொண்டதை அடுத்து, மாநிலத் தேர்தல்கள் 60 நாட்களுக்குள் நடைபெற அது வழி வகுத்தது.