1எம்டிபி ஊழலுடன் தொடர்புள்ள பேங்க் நெகாரா மலேசியாவின் (பிஎன்எம்) முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்தர் அஜீஸ் மற்றும் அவரது கணவர் மீது விசாரணை நடத்துமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) மசீச வலியுறுத்தியுள்ளது.
ஸெட்டியின் கணவர் தவ்பிக் அய்மனின் நிறுவனம் சம்பந்தப்பட்ட 1எம்டிபி தொடர்பான நிதியில், 15.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சிங்கப்பூர் மலேசிய அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகக் கடந்த வெள்ளிக்கிழமை எம்ஏசிசி கூறியதைத் தொடர்ந்து இந்த வலியுறுத்து வந்துள்ளது.
“1எம்டிபி ஊழல் மலேசியர்களை வேட்டையாடியுள்ளது, நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
“இந்த வழக்கில் பல்வேறு யூகங்கள் எழுந்ததால், 61 ஆண்டுகளாக ஆட்சி செய்த அப்போதைய மத்திய அரசின் வீழ்ச்சிக்கு 1எம்டிபிதான் காரணம் என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்டது.
“எனவே, எம்ஏசிசி ஒரு முழுமையான விசாரணையை நடத்துவது பொருத்தமானது, இதன் மூலம் உண்மையான கதையை மக்கள் கண்டறிய முடியும் மற்றும் அப்பாவி மக்கள் மீதான குருட்டுத்தனமான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்படும்,” என்று மசீச மத்திய செயற்குழு உறுப்பினர் குவேக் தை சியோங் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, முன்னாள் பிஎன்எம் கவர்னராக, 1எம்டிபி வழக்குக்கு ஸெட்டி பொறுப்பேற்க வேண்டும், ஏனென்றால் என்ன நடந்தது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.
“உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து, அத்தம்பதியினர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் இது, மேலும் விசாரணைகள் தொடரலாம்.
“இந்த ஜோடியின் தொடர்பு குறித்து ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டு பல நாட்கள் ஆகியும், அவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள், இதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த அனுமானங்களைச் செய்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
பகாங் மாநில மசீச தொடர்புக் குழு செயலாளரான குவேக், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், 1எம்டிபி வழக்கில் உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தீர்மானிக்க சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மிக முக்கியமான பிரச்சினை உண்மையான சூத்திரதாரிகளை அம்பலப்படுத்துவதும், எந்தவொரு தவறுக்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கோருவதும், சட்டத்தின்படி குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொரு நபரும் நிரபராதி என்று கருதப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
“ஸெட்டியும் அவரது கணவரும் கூடிய விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்,” என்று குவேக் கூறினார்.