வாக்கு18 நடைமுறைக்கு வந்த பிறகு, சரவாக் பிஆர்என் – மூடா வலியுறுத்து

ஜனவரி 2022 -இல், புதிய வாக்காளர்களின் தானியங்கிப் பதிவு மற்றும் வாக்கு18 நடைமுறைக்கு வந்த பிறகு, சரவாக் மாநிலத் தேர்தலை (பிஆர்என்) நடத்த ஈக்காத்தான் டெமோகெரத்திக் பெர்சத்து மலேசியா (மூடா) அழைப்பு விடுத்தது.

சரவாக் மூடா, அம்மாநிலத் தேர்தலை ஜனவரி 2 -ஆம் தேதி நடத்த வேண்டும் என்று முன்மொழிந்தது.

“நவம்பர் 3 -ஆம் தேதி அவசரநிலை பிரகடனம் முடிவடைந்த பின்னர், 60 நாட்களுக்குள் பிஆர்என் நடத்தப்பட வேண்டும் என்பது தெரிந்ததே.

“வாக்கு18 நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, வாக்குப்பதிவு தேதியை ஜனவரி 2 -ஆம் தேதி நிர்ணயம் செய்யுமாறு சரவாக் மூடா நிர்வாகக் குழு தேர்தல் ஆணையத்தை (இசி) வலியுறுத்த விரும்புகிறது,” என்று சரவாக் மூடா தலைவர் ஜெஃப்ரி நுய் சரவாக் இசி இயக்குநர் ஜஸ்னி ஜூப்லிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்.

இதன் மூலம் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட 135,000 புதிய வாக்காளர்கள் அடுத்த பிஆர்என் -இல் வாக்களிக்க முடியும் என்று ஜெஃப்ரி கூறினார்.

“வாக்கு18 நடைமுறைக்கு வருவதற்கு முன் வாக்களிப்பு நடத்தப்பட்டால், அது இளம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான உரிமைகளை மறுப்பது போல் தெரிகிறது, ஏனெனில் அவர்கள் வாக்களிக்க இன்னும் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

“அது தவிர, தானியங்கி வாக்காளர் பதிவு இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டு தேர்தலை நடத்துவதன் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது, இதனால் நூறாயிரக்கணக்கான புதிய வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

சமீபத்திய மலாக்கா பிஆர்என் போலவே, மாநிலத் தேர்தலின் போது, கோவிட்-19 நேர்வுகள் அதிகரிக்கக்கூடும் என்றும் ங்குய் குறிப்பிட்டார்.

“(நாம்) கோவிட்-19 நேர்வுகளின் குறைந்துவரும் போக்கைக் காணலாம், அடுத்த ஆண்டு வாக்களிப்பு நடத்தப்பட்டால், தொற்று கட்டுப்பாட்டில் இருக்கும்,” என்று அவர் கூறினார்.

சரவாக் ஒவ்வொரு நாளும் புதிய கோவிட்-19 நேர்வு எண்ணிக்கையில் மூன்று இலக்கங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வருவதால், வரவிருக்கும் பிஆர்என் குறைந்த வாக்குப்பதிவைக் காணக்கூடும் என்று அவர் கவலை தெரிவித்தார்.

“இது நாட்டின் ஜனநாயக அமைப்பை பாதிக்கும், அங்கு சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் சார்பாக தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் சமத்துவமற்ற பிரதிநிதித்துவத்தை உருவாக்கும். இது நாட்டின் ஜனநாயக அமைப்புக்கு மிகவும் ஆரோக்கியமற்றது,” என்று அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் இல்லை

இதற்கிடையில், சரவாக் மூடா தகவல் தலைவர் அஃபிக் கதேம் கூறுகையில், சரவாக் தேர்தல் ஆணையத்திடம் ங்குயின் கடிதம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

“நவம்பர் 14 அன்று, சரவாக் தேர்தல் ஆணையத்திற்கு அவர்களுடன் ஒரு சந்திப்பைப் பெற மின்னஞ்சல் அனுப்பினோம், வாக்களிக்க முடியாத இளைஞர்களின் வாக்கு18 இன்னும் நடைமுறைக்கு வரவில்லை,” என்று அவர் கூறினார்.

ஆணையத்திடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்பதால், கூச்சிங்கில் உள்ள இசி தலைமையகத்திற்கு மூடா சரவாக் சென்றதாக அஃபிக் கூறினார்.