‘இளைஞர் அமைப்புகளுக்கான வயது வரம்பை அமல்படுத்த அரசு அவசரப்பட வேண்டாம்’

மலேசியா முழுவதும் உள்ள இளைஞர் அமைப்புகளுக்கு 30 வயதுக்குட்பட்ட வயது வரம்பை அவசர அவசரமாக அமல்படுத்த வேண்டாம் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை (கேபிஎஸ்) அமைச்சர் அஹ்மத் பைசல் அசுமுவிடம் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி பிரபாகரன் கேட்டுக்கொண்டார்.

“கேபிஎஸ் எடுக்கும் முயற்சிகளுக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன்.

“இருப்பினும், இந்த அவசர அமுலாக்கம் பல்வேறு தரப்பினரிடம் கவலையை ஏற்படுத்தியிருப்பதால், ஃபைசல் அசுமுவால் இது பொருத்தமான செயல்முறையுடன் செயல்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

வரலாற்றிலேயே, ஆக இளையப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் கூற்றுப்படி, இந்த வயது வரம்பு 2019 -இல் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் கேபிஎஸ்-க்குத் தலைமை தாங்கியபோது அமல்படுத்தப்பட்டது.

“இருப்பினும், 35 வயதிலிருந்து தொடங்கும் நிலைகளில் செயல்படுத்தப்படும் என என்னிடம் கூறப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

இது ஒவ்வொரு இளைஞர் அமைப்பின் பங்குதாரர்களையும் உள்ளடக்கியது, அவர்களுக்கு முன்னேற்பாடு தேவை என்று அவர் கூறினார்.

எனவே, அவரைப் பொறுத்தவரை, இது அமைப்பின் செயல்பாடுகளைச் சீர்குலைக்கும், ஏனெனில் பெரும்பாலான முழுநேர உறுப்பினர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

“2020 முழுவதும் நாடு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபி) எதிர்கொண்டதால், இந்த விஷயத்தில் சரியான பரிசீலனை இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், இதன் விளைவாக நிறைய வேலைகள் ஒத்திவைக்கப்பட்டன.

“எனவே, 30 வயதிற்குட்பட்ட வயது வரம்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன், மெதுவாக அமலாக்கத்திற்கு வர காலக்கெடு இருக்க வேண்டும், ஏனெனில் இளைஞர் அமைப்புகளின் பங்குதாரர்களின் முழுமையான ஏற்பாடு இல்லாமல் போனால், அது ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று நான் அஞ்சுகிறேன்,” என்று அவர் கூறினார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு, 30 மற்றும் அதற்கும் குறைவான வயது வரம்பை இளைஞர் அமைப்புகளின் அலுவலகப் பணியாளர்களுக்கு 2022 ஜனவரி 1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரும் என்று ஃபைசல் முன்னதாக மக்களவையில் தெரிவித்திருந்தார்.