முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக், முன்கூட்டிய ஓய்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் விழுக்காடு தொடர்பான பதில்களைத் தொடர்ந்து துணைக் கல்வி அமைச்சர் டாக்டர் மாஹ் ஹாங் சூங்கைக் கேலி செய்தார்.
மக்களவையில், வாய்வழி கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த ஜனவரியில் இருந்து 0.01 விழுக்காடு பேர் சோர்வு காரணமாக முன்கூட்டியே ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர் என்று கூறப்பட்டது.
4,09,997 ஆசிரியர்களில், 4,360 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற உண்மையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.
கணக்கீடுகள் தவறானவை என்று நேரடியாகக் குறிப்பிடாமல், கீச்சகப் பயனர்களைத் தங்கள் சொந்தக் கணக்கீடுகளைச் செய்யுமாறு மஸ்லீ வலியுறுத்தினார்.
“முன்கூட்டியே ஓய்வுபெறக் கோரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து எனக்குக் கல்வித் துணை அமைச்சரிடமிருந்து கிடைத்த எழுத்துப்பூர்வப் பதில்.
“கணிதக் கணக்கீடு செய்வோம், 409,997 -இல் 4,360 = %?
“துணை அமைச்சரின் பதில் 0.01 விழுக்காடு,” என்று சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் கீச்சகத்தில் இன்று தெரிவித்தார்.
சரியான கணக்கீடு ஒரு விழுக்காடாக இருக்க வேண்டும், குறிப்பிட்டுள்ளபடி 0.01 விழுக்காடு அல்ல.
மாஹ் அந்தப் பதிலில், அந்த விண்ணப்பத்திற்கான காரணங்களில் சேவையைத் தொடர ஆர்வமில்லை, குடும்பக் காரணிகள், உடல்நலம், பணிச்சுமை மற்றும் தனிப்பட்ட காரணிகள் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.
“இதன் விளைவாக, பணிச்சுமை காரணமாக, முன்கூட்டியப் பணி ஓய்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் விழுக்காடு மிகக் குறைவு.
“மலேசியா கல்வி அமைச்சு ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ச்சி மற்றும் உளவியலைச் சீர்குலைக்கும் தற்போதைய சூழ்நிலையில் அக்கறை கொண்டுள்ளது.
“ஆசிரியர்கள் ஊக்கத்துடன் இருப்பதை உறுதி செய்வதற்காக, நிபுணத்துவ ஆலோசனை அமர்வுகள் மற்றும் உளவியல் ஆதரவு மூலம் கல்வியமைச்சு சமூக-உணர்ச்சி ஆதரவை வழங்குகிறது,” என்று அவர் கூறினார்.