மஇகா உறுப்பினர்களால் ஒரு பெண்ணுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று சுங்கை சிப்புட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் முகமட் கைசாம் அஹ்மத் ஷஹாபுடின் கூறினார்.
அந்தச் சம்பவத்தில் மஇகா உறுப்பினர் ஒருவர் அநாகரீகமான வார்த்தைகளைப் பேசியதாகவும், தனது காற்சட்டையைத் திறந்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.
அந்த நேரத்தில், ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் (என்.ஜி.ஓ.) செயலாளராக இருந்த அந்தப் பெண், சுங்கை சிப்புட்டில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்கு வடிகால் பிரச்சினையைப் பார்க்கச் சென்றதாக முகமட் கைசாம் கூறினார்.
“நவம்பர் 25 அன்று எனக்கு ஒரு போலீஸ் புகார் கிடைத்தது, நாங்கள் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
“தண்டனைச் சட்டத்தின் 506-வது பிரிவின்படி விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை அறிக்கை விரைவில் துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
பதிவுக்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 குற்றவியல் மிரட்டல் வழக்கைக் குறிக்கிறது, மேலும் அந்தப் பெண் நவம்பர் 25 அன்று காவல்துறையில் புகார் அளித்தார்.
போலீஸ் அறிக்கையில், அடைபட்ட வடிகால்கள் குறித்து குடியிருப்பாளர்களிடமிருந்து புகார்களைப் பெற்ற பின்னர், என்.ஜி.ஓ. உறுப்பினர்கள் மற்றும் கோலகங்சார் நகராட்சி மன்ற (எம்.பி.கே.கே.) அதிகாரிகளுடன் அங்குச் சென்றதாக அந்தப் பெண் கூறினார்.
அந்த இடத்தில் திரண்டிருந்த மஇகா உறுப்பினர்கள், வடிகால் பிரச்சினையைத் தீர்க்க தாங்கள் முயற்சிப்பதாகக் கூறி, என்.ஜி.ஓ. -ஐ தலையிட வேண்டாம் என்று எச்சரித்ததோடு, தன்னைத் தடுத்து நிறுத்தி விரட்டியடிக்க முயன்றதாக அந்தப் பெண் கூறினார்.
காவல்துறை அறிக்கையின் அடிப்படையில், என்.ஜி.ஓ. பிரதிநிதிகள் அசையாததால், மஇகா உறுப்பினர் ஒருவர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் முன் தனது காற்சட்டையைத் திறந்ததால் நிலைமை பதட்டமானது.
இதற்கிடையில், சுங்கை சிப்புட் மஇகா தலைவர் கே மணிமாறன் பெண்ணின் குற்றச்சாட்டை மறுத்தார்.
“சம்பவம் நடந்தபோது நான் அங்கு இருந்தேன், எங்கள் உறுப்பினர்களால் பாலியல் துன்புறுத்தல் எதுவும் செய்யப்படவில்லை என்பதை நான் இதன் மூலம் கடுமையாக மறுக்கிறேன்.
“அங்கு வசிப்பவர்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக அந்தப் பெண் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
அந்தப் பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மஇகா நாளை போலீசில் புகார் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.