பாஸ்: கெடாவில் ஹூடுட் சட்டம் இல்லை

கிளந்தான், திரெங்கானு மாநிலங்களுக்கு வெளியில் ஹூடுட் சட்டத்தை நடைமுறைப்படுத்த பாஸ் எண்ணம் கொண்டிருக்கவில்லை.

கடந்த வாரம் மலேசியாகினியுடனான நேர்காணலில் பாஸ் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் அஹ்மட் பாய்ஹாகி அடிகுவாலா இவ்வாறு கூறினார். பாஸ் அதன் இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளுமுன்னர் மக்கள்தொகை அமைப்பையும் கருத்தில் கொள்ளும்.

“முஸ்லிம் மக்களைப் பேரளவில் கொண்டுள்ள மாநிலங்களில் ஹூடுட் சட்டத்தை அமல்படுத்தும் வாய்ப்பை எங்களுக்குக் கொடுக்க வேண்டும்.

“ஆனால், பல இனங்கள் கலந்துவாழும் இடங்களில், கிட்டத்தட்ட பாதிப்பேர் முஸ்லிம்-அல்லாதாராக உள்ள இடங்களில் கிளந்தானில் செய்ததுபோல் செய்ய வேண்டியதில்லை.

“எடுத்துக்காட்டுக்கு கெடாவில் ஹூடுட் சட்டம் பற்றி நாங்கள் பேசுவதில்லை. ஏனென்றால், அங்கு முஸ்லிம்கள்தான் பெரும்பான்மை மக்கள்  என்றாலும் முஸ்லிம் அல்லாதாரும் பெரிய எண்ணிக்கையில் உள்ளனர்”, என்றாரவர்.

2008-இலிருந்து கெடாவில் ஆட்சியில் இருப்பது பாஸ்தான் என்றாலும் கெடா பாஸ், ஹூடுட் சட்டத்தைப் பின்பற்றவில்லை. மற்ற மாநிலங்களிலும் அதே கொள்கைதான் தொடரும் என்று பாய்ஹாகி விளக்கினார்.

இம்முடிவுக்கு அரசியல் காரணங்களும் உண்டு.

“மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் அக்கொள்கை பயன் அளிக்கலாம். ஆனால் கிளந்தானுக்கு வெளியில் சிலாங்கூர் போன்ற இடங்களில் அது காலை வாரிவிடும்”, என்று பாசிர் தும்போ சட்டமன்ற உறுப்பினரும் மாநில  ஆட்சிக்குழு உறுப்பினருமான பாய்ஹாகி கூறினார்.

பாஸ் திரெங்கானுவிலும் கிளந்தானிலும் முறையே 2000-த்திலும் 19993-இலும் ஹுடூட் சாயலில் அமைந்த சட்டங்களை நிறைவேற்றி வைத்துள்ளது.ஆனால், அவை இன்னும் அமலாக்கம் பெறவில்லை. அரசமைப்பில் திருத்தம் செய்யாமல் அவற்றை நடைமுறைப்படுத்த இயலாது.

TAGS: