சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியரான நாகேந்திரன் கே.தர்மலிங்கம் சட்டப்படி உரிய நடைமுறைகளைப் பெற்றுள்ளார்.
நாகேந்திரனின் தண்டனையைக் குறைக்குமாறு கோரி, யாங் டி பெர்த்துவான் அகோங் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல் முஸ்தபா பில்லா ஷா அனுப்பிய கடிதத்திற்குப் பதிலளித்து சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் இவ்வாறு தெரிவித்தார்.
மலேசியத் தலைவர்களின் மேல்முறையீட்டுக் கடிதங்கள் மற்றும் சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணத் தண்டனைக்குக் காத்திருக்கும் நாகேந்திரனின் (33) தலைவிதி மீதான ஊடக விசாரணைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் குடியரசின் வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை இந்த அறிக்கையை வெளியிட்டது.
நவம்பர் 12 அன்று, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் மலேசிய சகாக்களின் கடிதங்களுக்குப் பதிலளித்தனர்.
முன்னதாக, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா ஆகியோர் சிங்கப்பூரில் உள்ள தங்கள் சகாக்களுக்குக் கடிதம் அனுப்பி, நாகேந்திரனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க சிங்கப்பூர் அதிகாரிகளின் விருப்புரிமையைக் கேட்டுக்கொண்டனர்.
பேராக்கைச் சேர்ந்த நாகேந்திரன், ஏப்ரல் 22, 2009 அன்று, 42.72 கிராம் டைமார்ஃபின் கடத்தியதற்காகச் சிங்கப்பூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நவம்பர் 22, 2010 அன்று சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தின் ஊடாக, மேன்முறையீடு செய்யும் நடவடிக்கை ஏற்கனவே நாகேந்திரன் குடும்ப வழக்கறிஞர்களால் ஜனாதிபதியின் மன்னிப்பு விண்ணப்பத்தின் மூலம் இறுதிக் கட்டம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், விண்ணப்பம் ஜூன் 1, 2020 அன்று நிராகரிக்கப்பட்டது.
நாகேந்திரனுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் நவம்பர் 10, 2021 அன்று தண்டனையை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது, இருப்பினும் அவர் தனது இறுதி மேல்முறையீட்டைத் தாக்கல் செய்யவிருந்தபோது, கோவிட் -19 தொற்றுக்கு அவர் ஆளாகியுள்ளார் என்று நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நவம்பர் 9 அன்று தற்காலிகத் தடை உத்தரவு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
நாகேந்திரனின் வழக்கறிஞர், அவரது கட்சிக்காரர் அறிவுசார் ஊனமுற்றவர் என்று கூறியுள்ளார்.
- பெர்னாமா