இயேசு பிரான் அவதரித்த நன்னாள்.. களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை.

‘இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் எந்நேரமும் நள்ளிரவில் நிலவும் அமைதி!’

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் ‘கிறிஸ்துமஸ் பண்டிகை’யாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளின் முன்பாக கிறிஸ்துமஸ் மரங்களை அமைப்பது, நட்சத்திர விளக்குகள் மற்றும் சீரியல் விளக்குகளைத் தொங்கவிடுவது, இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும்விதமாக ‘குடில்’ அமைப்பது என மகிழ்ச்சியுடன் பல வேலைகளைச் செய்துவைத்திருப்பார்கள். அத்துடன் புத்தாடை வாங்கி அணிவது, பட்டாசு கொளுத்துவது, கேக் வெட்டுவது, பலகாரங்கள் செய்வது என கிறிஸ்தவர்களின்  வீடுகள் விழாக்கோலம் பூணும். ஆலயங்களிலும் கிறிஸ்துமஸை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம்.

கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் இந்தச் சூழலில் இயேசு கிறிஸ்து பிறந்த இடத்துக்குச் சென்று வந்த அனுபவத்தை எழுத்தாளர் அ.ஜோசப்ராஜ் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

“இறைவன் தாம் படைத்த உலகை அன்பு செய்வதன் அடையாளமாக, தனது மகன் இயேசு கிறிஸ்துவை இந்த உலகில் மனிதனாகப் பிறக்கச் செய்தார். இயேசு கிறிஸ்து, இந்த மண்ணுலகில் பிறப்பெடுக்கக் காரணம், மானிடராகிய நமது துன்பங்களையும் கவலைகளையும் நீக்கி மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்பதற்காகவே.

மகிழ்ச்சியின் நாயகனாகிய இயேசு கிறிஸ்து 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லஹேம் என்ற சிற்றூரில் மாட்டுத்தொழுவத்தில், ஏழ்மையான சூழலில் பிறந்தார். இயேசு பிறந்த, வாழ்ந்த இடங்களான இஸ்ரேல் நாட்டுக்கு மூன்று முறை புனிதப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். இயேசு பிறந்த பெத்லஹேம் என்ற எபிரேய சொல்லுக்கு ‘அப்பத்தின் வீடு’ என்று தமிழில் பொருள். ஜெருசலேமுக்குத் தெற்கே கடல் மட்டத்திலிருந்து 770 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சிறிய ஊர் பெத்லஹேம்.

பெத்லஹேம், இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ் (Tel Aviv) நகரிலிருந்து 73 கிலோமீட்டர் தூரமும் ஜெருசலேமிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. பரபரப்பு எதுவும் இல்லாத, மிகவும் அமைதியான நகரம் பெத்லஹேம்.

பெத்லஹேம், கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் யூதர்களுக்கும் முக்கியமான ஓர் இடம். பெத்லஹேமின் நுழைவுவாயிலில் உள்ள ராகேல் கல்லறை யூதர்களுக்குப் புனிதமான இடம். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, இயேசு கிறிஸ்து பிறந்த இடம். தாவீது அரசர் பிறந்த ஊரும் இதுதான். பைபிளின் தொடக்க நூலிலேயே பெத்லஹேம் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது.

பெத்லஹேமில் உள்ள ஆலயத்தின் பாதுகாவலர் புனித மைக்கேல் அதிதூதர் ஆவார். இயேசு பிறந்த இடத்தில் அமைந்துள்ள ஆலயம், உயர்ந்த சுவர்களுடன் பழங்காலக் கோட்டையைப்போல காணப்படுகிறது. அதற்கு முன்பாக விசாலமான திறந்தவெளி, உயர்ந்த சுவர்களுக்கிடையே சிறிய நுழைவுவாயில் இருக்கிறது.

‘விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை’ என்று லூக்கா எழுதிய நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளபடி மாட்டுக் கொட்டகையில் எளிமையாக, ஏழ்மையான சூழலில் பிறந்தார் இயேசு கிறிஸ்து. அவர் பிறந்த இடத்தைக் காண வருபவர்கள் தங்களது உடலையும் உள்ளத்தையும் தாழ்த்திக்கொண்டு இயேசுவைப்போல எளிய மனிதர்களாக வர வேண்டும் என்பதற்காகவே நுழைவுவாயில் சிறியதாக அமைக்கப்பட்டிருக்கிறது. குனிந்தபடி அந்தக் குறுகிய வாயிலைக் கடக்கும்விதமாக அது அமைந்திருக்கிறது.

13-ம் நூற்றாண்டு வரை பெரிய அலங்கார வாயிலாகத்தான் இது இருந்திருக்கிறது. அப்போது இங்கு ஆட்சிசெய்த அந்நியர்கள், நினைத்தபோதெல்லாம் ஆலயத்துக்குள் நுழைந்தார்களாம். மேலும், அவர்களில் சிலர் குதிரைகள் மீது உட்கார்ந்துகொண்டே ஆலயத்துக்குள் வலம் வந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தடுப்பதற்காகவே வாயிலைக் குறுக்கி அமைத்திருக்கிறார்கள்.

தலையைக் குனிந்தபடி ஆலயத்துக்குள் நுழைந்தால், அங்கிருக்கும் பெரிய மண்டபம் அதிக வெளிச்சம் இல்லாமல் காணப்படுகிறது. 12 தூண்கள் வீதம் நான்கு வரிசையில் பெரிய ஆலயம் காணப்படுகிறது. அதில் பழங்காலத்து சர விளக்குகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

மைய பீடத்தின் இடதுபுறம் இயேசு கிறிஸ்து பிறந்த குகைக்கான சிறிய வாசல் இருக்கிறது. 10, 12 படிக்கட்டுகள் இறங்கி குகைக்குள் வந்தால் இயேசு பிறந்த இடம் வெள்ளி நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. அதை நெருங்கிச் சென்றால் 50 பேர் நிற்கும்விதமாக அமைந்திருக்கும் சிறிய குகை ஒன்று இருக்கிறது. அதன் உள்ளே அணையா விளக்கு எரிந்துகொண்டே இருக்கிறது. மேலே அண்ணாந்து பார்த்தால் 14 விளக்குகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

நானும் என் மனைவியும் இயேசு கிறிஸ்து பிறந்த அந்த இடத்தைக் கண்டதில் பெருமகிழ்ச்சியடைந்தோம். கூடவே இயேசுவை தரிசித்தது போன்ற பரவசத்தையும் அடைந்தோம். அந்த இடத்தில், எந்த நேரத்திலும் நள்ளிரவில் நிலவும் அமைதி நிலவுகிறது.

கிறிஸ்துமஸ் பெயர்க் காரணம்.

கிரேக்க மொழியில் ‘கிறிஸ்டோஸ்’ என்றால் ‘காப்பாற்ற அவதரித்தவர்’ என்று பொருள். ஆங்கிலத்தில் ‘மாஸ்’ என்ற வார்த்தைக்கு பண்டிகை அல்லது கொண்டாடுதல் என்று பொருள்படும். மக்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்க அவதரித்தவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதே கிறிஸ்துமஸ்.

‘கிறிஸ்து’ என்ற வார்த்தையைச் சுருக்கமாக கிரேக்க மொழியில் ‘X’ என்ற எழுத்தால் குறிப்பிட்டார்கள். அதனால்தான் கிறிஸ்துமஸ் என்பதை ‘Xmas’ என்று சொல்கிறார்கள்.