மலேசிய-சீன வாணிப சங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்கு பண உதவி

இன்று கோலாலம்பூர் சீன சமூகம் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் நான்கு  தமிழ்ப்பள்ளிகளுக்கு மலேசிய-சீன வாணிப சங்கம் ரிம  27,000 வழங்கியது.

அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு உதவும் பொருட்டு மலேசியச் சீன-வாணிப சங்கம் (Malaysia – China Chamber of Commerce)  உதவித் திட்டங்களை முடுக்கி விட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று அந்த உதவித் தொகையை வழங்கும் நிகழ்வு கோலாலம்பூரில் உள்ள சீன சமூக மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வின்போது அந்த சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் தான் யூ சிங் (Datuk Tan Yew Seng) அந்த மாதிரி காசோலையை எடுத்து வழங்கினார். காப்பார் அருகில் இருக்கும் ஜலான் அக்கோப் தமிழ்ப் பள்ளி  ரிம 5,000-மும், காசபீல்டு தமிழ்ப்பள்ளி ரிம 10,000-மும், காராக் தமிழ்ப்பள்ளி ரிம 10,000-மும், பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி ரிம 2,000 -மும் பெற்றன.

அக்கோப் பள்ளியின் வாரியத்தலைவர் இராமச்சந்திரன் அந்தப்பள்ளிக்கான  காசோலையை பெற்றுக்கொண்டார். தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டுக்காகச் செயலாற்றி வரும் பள்ளி வாரியம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர் என்றார்.

இது ஒரு தோட்டப்புற பள்ளியாக இருப்பதால் இதன் வழி செயல்படும் பெரும்பான்மையான ஆர்வலர்களும் அங்கத்தினர்களும் சாதாரண மக்களாக உள்ளனர். இவர்கள் இந்த பள்ளி மேலோங்கப் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தப் பள்ளியில் பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்கள். கடந்த வெள்ளத்தின் போது இந்தப் பள்ளியில் உள்ள கணினி அறைகள் வகுப்பறைகள் பல வகையான தளவாடப்பொருட்கள் சேதம்  அடைந்ததாகப் பள்ளி வாரிய தலைவர் இராமச்சந்திரன் கூறினார்.

இந்த பள்ளி நீண்டகாலமாக அதே இடத்திலிருந்து வருகிறது. இந்தப் பள்ளியைச் சுற்றியுள்ள மேம்பாட்டுத் திட்டங்களால் இந்தப் பள்ளியின் நிலப்பரப்பைக் கீழ் மட்டத்தில் மாட்டிக்கொண்டது. ஆகவே கனத்த மழையின் போது இந்த பள்ளி வெள்ளத்தால்  பாதிக்கப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வை நாடி வருவதாக இந்த வாரியத்தலைவர் கருத்துரைத்தார்.

இந்தச் சீன-வாணிப சங்கத்தின் வழி இந்த பள்ளிகளுக்கு நிதி உதவி அளிக்க முக்கிய பிரமுகராக இருந்த  தான் யூ சிங் அவர்களுக்கு பள்ளிகளின் சார்பாக நன்றி கூறிக் கொள்வதாக இராமச்சந்திரன் தெரிவித்தார்.