கி.சீலதாஸ்- மலேசியா எப்படிப்பட்ட இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதைச் சுதந்திரத்திற்கு முன்னமே தீர்மானிக்கப்பட்டது. அது சமுதாய நீதி, நேர்மை, திறமை மிகுந்த ஆட்சி, நாட்டில் எல்லா இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வது, பகைமை, வெறுப்புணர்வு போன்றவற்றிற்கு இடமளிக்காத சமுதாய உறவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஒரு சிலருக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட போதிலும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கும், பாதுகாப்புக்கும் எவ்வித முட்டுக்கட்டையும் இருக்காது என்ற நம்பிக்கை மிகுந்து இருந்தது.
சமுதாய நீதி, மக்களின் பாதுகாப்பு, மக்களின் சிந்தனை சுதந்திரம், பேச்சு சுதந்திரம், வாழ்வு சுதந்திரம், தன்மானச் சுதந்திரம் யாவும் அரசமைப்புச் சட்டத்தில் ஆழமாகப் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சமுதாயத்துக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதால் பிற சமுதாயங்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பொருள்படாது.
சிறப்புச் சலுகை என்றால் மற்றவர்களின் சொத்தைப் பறித்து பங்கிடுவது அல்ல. சட்டத்தில் யாவரும் சமம் எனும்போது செல்வ பலம் பெரும்பான்மை கொண்டவர்களுக்கு ஒரு நியதி; சிறுபான்மையினர்க்கு வேறொரு நியதி என்றாகாது. சமுதாயத்தில் ஒற்றுமையுணர்வு இருந்தால்தான் நாட்டில் நல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் வழிகோலும் என்பதை எல்லோரும் உணர்ந்த உண்மை. ஆனால், இந்த உண்மையை ஏனோ அதிகாரத்துக்காக அலையும் அரசியல்வாதிகளின் கவனத்திலிருந்து நழுவிவிட்டது.
சுதந்திர நாடாக பயணத்தை ஆரம்பித்தபோது நல்லெண்ணம், இலட்சியம், பரஸ்பர நம்பிக்கை, நட்புணர்வு, மனிதநேய அணுகுமுறை போன்றவைக்கு மரியாதை செலுத்தப்படும். நம் வாழ்க்கையின் முக்கிய அங்கங்களாகக் கருதப்பட்டது. ஆனால், இன்று அவற்றிற்குச் சவால் விடும் செயல்கள் பட்டவர்த்தனமாகிவிட்டதைக் காண்கிறோம். சுதந்திர நாட்டின் சுபிட்சம் திறமையான, ஊழலற்ற நிர்வாகம், சமுதாய நீதி, சட்ட ஒழுங்கு காத்தல் போன்றவை அமல்படுத்துவதில் இருக்கிறது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட நல்ல கொள்கைகளுக்கு மதிப்பளிக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது கவலைக்குரியதாகும்.
பெரும்பான்மையினர்க்குச் சிறப்புச் சலுகை என்றால் அது சிறுபான்மையினரைச் சிறுமைப்படுத்துவதற்காகப் பயன்படுத்துவது அநீதி என்பது மட்டுமல்ல கொடுமையான அரசியல் என்றாலும் பொருந்தும்.
இன்றைய மலேசியாவில் நடப்பது என்ன? சுதந்திரத்துக்கு முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை மதிக்காத மனோபாவம்; அன்று கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை உதாசீனம் செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையாவும் ஆட்சியில் நீண்ட காலமாக அமர்ந்திருந்த அரசியல் கட்சியின் குற்றமாகும். அம்னோவிடம் நாட்டு நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பொறுப்பை அது செவ்வெனச் செய்ததா என்பதே கேள்வி.
நாட்டில் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இரட்டை கோபுரம், நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையம், புதிய தலைநகர், புதிய பல்கலைக்கழகங்கள், பல்வேறு பொருளாதார முன்னேற்றங்கள் யாவும் உண்மைதான். ஆனால், இந்த உண்மையான, நம் கண்களுக்குத் தெரிகின்ற அற்புத காட்சிகளின் பின்னால் பல்லாயிரக் கோடி ஊழல்களின் தாண்டவமும் இருக்கிறது என்பது இப்போது வெளிச்சமாகிவிட்டது.
ஆட்சியை இழந்த அம்னோ தலைவர்கள் பல குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதும், தண்டிக்கப்பட்டார். மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்துவிட்டது. கூட்டரசு நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்துள்ளார். நஜீப் நிரபராதியா அல்லது குற்றம் செய்தவரா என்பது நியாயமான கேள்வியாக இருந்தாலும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன? (தொடரும்)