கி.சீலதாஸ்– பல்லாயிரம் கோடி மக்களின் பணம் சட்டதுக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகிறது. இழப்பு யாருக்கு? நாட்டுக்கும் மக்களுக்கும் பல்லாயிரக் கோடி இழப்பு. மக்களின் இழப்பில், துயரில் சுகமாக ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அதிகாரத்தில் இருந்த, இருக்கும் அரசியல்வாதிகள்!
இதுதான் அம்னோ அரசியல் தலைவர்களின் அரசியல் பயணம் கண்ட பலன். நாடு பெருமளவில் பணத்தை இழந்தால் அதை ஈடு செய்ய புது வரிகள் விதிக்கப்படலாம் அல்லவா? வரி பளுவை மக்கள்தான் சுமக்க வேண்டும்.
அரசியல் அதிகார மோகம் இன்றும் தணியாதபோது பல திட்டங்களை வகுத்து மக்களின் தீர்ப்பை முறியடிக்கும் பணியில் இறங்கினர். மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் தேவையானதா? இல்லை! ஜொகூரில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. தேவையா? இல்லை. ஆனால், பதவி வெறிக்கு ஆளாகிவிட்ட அரசியல்வாதிகளுக்கு இது தேவை. இதில் ஏமாறுவது, ஏமாற்றப்படுவது யார்? மக்கள்!
ஆகமொத்தத்தில், நாட்டு நிலவரத்தை நன்கு ஆராய்ந்துப் பார்த்தால், இப்பொழுது நடப்பது சமுதாய நீதிக்கான போராட்டமல்ல! மக்கள் நலனைக் காக்கும் போராட்டமுமல்ல! நாட்டில் நீதி ஆட்சிக்கான போராட்டம் அல்ல! சுயநல தலைவர்கள் தங்கள் அதிகார வெறியை நிறைவுபடுத்த மேற்கொள்ளும் போராட்டமாகும்.
இந்த ஜொகூர் சட்டமன்ற தேர்தல் பணவிரயத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே, இந்தச் சட்டமன்ற இடைத்தேர்தலை எப்படி சித்தரிப்பது? அரசியல் அதிகாரத்துக்காகப் போராடும் பல தரப்பினரின் போராட்டம் என்பதுதான் உண்மை.
அம்னோவின் சமீபகால போராட்ட முழக்கம் மலாய் இன, சமய பாதுகாப்பு என்பதாகும். இதன் அடிப்படையில்தான் நம்பிக்கை கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இன்று அந்த ஆட்சி கவிழ்ப்பில் தொடர்புடைய தலைவர்களிடையே நம்பிக்கை தேய்ந்துவிட்டது. அதிகாரத்துக்காகப் போராடுகிறார்கள். அவர்களிடம் பண பலம் இருக்கிறது. அவர்களுக்கு எப்படி இந்த அளவு பண பலம் பெற முடிந்தது? சட்டப்பூர்வமாக ஊழல் செய்தார்களா? இது மக்களுக்குத் தெரியவில்லை. பெரும்பான்மையினரைப் பாதுகாப்பதாகச் சொல்வார்கள். இந்தப் பெரும்பான்மை தலைவர்கள் அவர்கள் சொந்த நலனில்தான் கவனமாக இருந்தார்களே அன்றி நாடு முன்னேற்றப் பணிகள் என்ற திட்டங்களின் வழியாகப் பெரும்பான்மை மக்களின் நலனைக் கவனிக்க ஏது நேரம்?
ஆனால், உணர்ச்சியூட்டும் இன, சமயக் கோஷங்களை எழுப்பி பெரும்பான்மையினரின் கவனத்தைத் திருப்பி வருகிறார்கள். ஏமாந்தது யார்? ஏமாறுவது யார்? இறுதியில் அவதிப்படுவது யார்? மக்கள்! மக்கள்!
இந்த உண்மையை மக்கள் உணராத வரையில் அரசியல் அதிகார வேட்டையாளர்களுக்கு நல்ல காலம்தான். இதை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும் என்பது அவர்களின் தலையாய கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்ற மக்கள் தயாராக வேண்டும்.
சுபாஷித நன்மொழிகளில் வரும் ஒரு சுலோகத்தைக் கவனிப்போம். குதிரை இல்லை, யானை இல்லை, புலி இல்லை; குட்டி ஆடுதான் பலி கொடுக்கப்படுகிறது. முடிவு: கடவுள் கூட வலிமையற்றவர்களைத் தற்காக்கவில்லை. அதிகாரத்துக்காகப் போராடுவார்கள் பலசாலிகள். அதிகாரத்தில் இருப்பவர்களும் பலசாலிகள். அவர்களின் போராட்டத்தில் மக்களின் கதி என்ன?
வறுமையில் இருப்பவர்களின் கதி என்ன? குட்டி ஆடு கதிதான். ஊழல் செய்து பிழைப்பவர்கள் ஊழல் அரசுக்குத் துணையாக இருப்பார்கள். இவர்களின் பேராசைக்குப் பலியாகுவது சாதாரண மக்களே!
இதற்கான விமோசனம் என்னவாக அமைய வேண்டும் என்பதை கட்டுரை ஆசிரியர் வாசகர்களிடைமே விட்டு விடுகிறார்