இளைஞர்களின் வாக்குகள் ஜொகூரில் வரலாறு படைக்கட்டும் – கி.சீலதாஸ்

ஜொகூர் மாநில பொதுத் தேர்தல் புது இலக்கைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் முடிவுகள் இளைஞர்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கும். இது ஜொகூரின் எதிர்காலம் மட்டுமல்ல இளைஞர்களின் பங்கு நாட்டின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்ததாகும்.

கடந்த ஜனவரி திங்கள் 22ஆம் நாள் ஜொகூர் மாநில மந்திரி புசார் (முதலமைச்சர்) சட்டமன்றத்தைக் கலைத்துவிட வேண்டும் என்று முன்வைத்த ஆலோசனையை மாநில ஆட்சியாளர் சுல்தான் இபுராஹீம் ஏற்றுக்கொண்டு சட்டமன்ற கலைப்புக்கான உத்திரவைப் பிறப்பித்தார். மந்திரி புசார் தந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்வதும், நிறுத்தி வைப்பதும் ஆட்சியாளரின் விருப்புரிமை.

ஜொகூர் மாநிலத்தில் சில காலமாகவே ஆட்சியாளர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது நாடறிந்த ஒன்றாகும். ஒரு காலகட்டத்தில் தமது மனச்சங்கடத்தை வெளிப்படுத்துவது போல் அமைந்திருந்தது அவரின், “சட்டமன்றத்தைக் கலைத்துவிடுவேன்” என்ற எச்சரிக்கை.

சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து அறுபது நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறது சட்டம். ஜொகூரில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பதினெட்டு வயது எய்திய மலேசிய குடிமக்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுவிட்டனர். முன்புபோல் வாக்காளராவதற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இப்பொழுது பதினெட்டு வயது எய்தியதும் வாக்களிக்கும் உரிமையை இயல்பாகவே பெற்றுவிடுவர்.

18.12.2021ஆம் நாள், இந்த நாட்டின் வாக்குரிமை வரலாற்றில் முதன் முதலாகப் பதினெட்டு வயது எய்தியவர்கள் வாக்குரிமை பெற்றுவிட்டனர். அரசு பதிவிதழில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழரை லட்சம் புது வாக்காளர்கள் பதிவு பெற்றுள்ளதாகத் தகவல் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இது முப்பது விழுக்காடு உயர்வைக் காட்டுகிறது. ஜொகூரில் இப்பொழுது இரண்டரை மில்லியன் வாக்காளர்கள் பதிவு பெற்றிருப்பது வாக்கு பதிவில் மாற்றம் தென்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கல்வியறிவு பெற்றுள்ள இளம் வயதினர் நாட்டில் நல்ல முன்னேற்றமும், மாற்றமும் காண விழைவதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் புது பதினெட்டு வயதினரும், இதற்கு முன்பு பதிவு பெற்றிருந்த இருபத்தோரு வயது வாக்காளர்களும் எப்படிப்பட்ட அரசியல் அறிவைப் பெற்றிருக்கின்றனர் என்ற கேள்வி எழாமல் இல்லை. கல்வி எனும்போது இதுவரையில் கற்பிக்கப்பட்ட முறை விவேகமுடைய இளைஞர் சமுதாயத்தை உருவாக்கியுள்ளதா எனக் கேட்கத் தோன்றும். அதே சமயத்தில், இதுகாறும் பதினெட்டு வயதினர் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்ததையும் கவனத்தில் கொள்வது அவசியம். எப்படிப்பட்ட கட்டுப்பாடு? சமயக் கட்டுப்பாடுகள், இனத்தை ஒட்டிய கட்டுப்பாடுகள் போன்றவை இளம் சமுதாயத்தினரைப் பரிவோடு சிந்தித்துச் செயல்படும் தரத்தைக் கற்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.

இன்று இளைஞர்களை மிகவாகக் கவர்வது எது? போதைப்பொருள் பயன்படுத்துதல், அதை விற்க துணைப்போவது, வன்செயலில் தீவிரம், இரகசிய கும்பல் உறவு, அவர்களோடு சேர்ந்து குற்றங்களைப் புரிவது போன்ற தீய குணாதிசயங்கள் பரவியிருப்பதைப் பார்க்கும்போது அரசியல் வாழ்க்கையில் ஊறிப்போனவர்கள் இவர்களைப் பயன்படுத்தி மேலும் பாதாளத்தில் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சம் நம்மை வருத்துகிறது. அதுமட்டுமல்ல வாக்கு சேகரிப்பு என்ற போர்வையில் இவர்கள் தகாத செயல்களில் கூட இறங்கலாம். பழுத்த அரசியல்வாதிகள் பண பலம், அதிகார பலம், சமுதாய செல்வாக்கு பெற்றவர்கள். இளைஞர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்களைத் தீயச் செயல்களுக்குக் கொண்டு செல்வார்களோ என்ற அச்சம் மேலிடுகிறது.

இளைஞர்கள்தான் இந்த நாட்டின் எதிர்கால தலைவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும்போது ஒரு நாட்டின் குடிமகன் என்றால் அவர்களின் கடமை என்ன? பொறுப்பு என்ன? அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் சிந்திக்கும் ஆற்றலற்றவர்கள் என்று சொல்வது பெரும் தவறு! அவர்களின் சிந்தனையைத் தவறான பாதையில் கொண்டு செல்லும் தலைவர்கள், பொறுப்பாளர்கள் அவர்களின் சிந்திக்கும் ஆற்றலைச் சுயநலவாதிகளின் சொந்த நலனுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தும் உள்ளது. இதைத் தவிர்க்க வேண்டும்.

இளைஞர்கள் நாட்டைப் பாதுகாக்கும் முறைகளை மட்டுமல்ல பல்வேறு இனங்கள், மொழிகள், சமயங்கள், கலாச்சாரங்கள் அனைத்தையும் இளம் வயதிலிருந்தே தெளிந்த அறிவுடன் உணரும் தன்மையைக் கொண்டிருக்கும் கல்வியை, வாழ்வு முறையைப் பெறுவதற்கு வகை செய்ய வேண்டும். பழைய தலைவர்கள் வயதானவர்கள், அனுபவத்தில் வல்லவர்களாக இருந்தாலும் சுயநலம் அவர்களிடம் விடாப்பிடியாக இருப்பதைக் காணும் ஆற்றலை இளைஞர்கள் பெற வேண்டும்.

ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டால்தான் இந்த நாட்டில் நிம்மதி இருக்கும், அந்த இலக்கை அடையும் ஆற்றலை இளைஞர்கள் பெற வேண்டும். ஊழலற்ற சமுதாயம், நீதிக்குக் கட்டுப்பட்ட சமுதாயம், சட்டத்துக்கு மதிப்பளிக்கும் வாழ்க்கை என இவையாவும் இளைஞர்கள் அறிய வேண்டும். வாக்குரிமையைக் கொடுத்துவிட்டு அதில் ஆதாயம் காண முற்படுவது பழைய அநாகரிகமான அரசியல்; அது வேண்டாம் என்று உணர்த்த வேண்டும். ஜொகூர் மாநிலம் அதற்கு முன்னோடியாக இருக்கும். இந்த வகையில் ஜொகூர் வரலாறு படைக்கிறது என்றால் மிகையாகாது.

பெற்றோருக்குப் பெருமை, உறவினர்க்குப் பெருமை, நண்பர்களுக்கும் சமுதாயத்திற்கும் பெருமை, நாட்டுக்குப் பெருமை என அனைத்தும் இளைஞர்களின் கையில்தானே இருக்கிறது. ஒன்றை மதிக்க தவறினால் பிறகு ஒன்றன் பின் ஒன்றாகச் சரிந்துவிடும். இறுதியில் எவர்க்கும் பயன்படாதவர்களாக வீணாகிவிடுவார்கள். இப்படிப்பட்ட இளைஞர் சமுதாயத்தை மலேசியா இதுவரையில் கண்டது!

எப்போது மாறும்? உங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்பதை உணர்த்துவதுதான் வாக்களிக்கும் உரிமை. வாக்களித்து ஆட்சி நிர்வாகங்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வந்துவிட்டது, கூடவே கடமையும் மிளிர்ந்துவிட்டது. இதை உணர்த்தும் பொறுப்பு அரசுக்கு உண்டு.

வரும் ஜொகூர் மாநில பொதுத் தேர்தல் புது இலக்கைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் முடிவுகள் இளைஞர்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கும். இது ஜொகூரின் எதிர்காலம் மட்டுமல்ல இளைஞர்களின் பங்கு நாட்டின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்ததாகும். ஊழலற்ற ஆட்சி நேர்மையான நீதி வழங்கும் ஆட்சியாக அமையும் என்று நம்புவதற்கு இளைஞர்களின் முழு ஆதரவு இன்றியமையாததாகும்.

மார்ச் 12 வரலாறு படைக்குமா?