மார்ச் 12-ல் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.), திரைப்பட இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ, 46, கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) நேற்றிரவு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தது.
N49 கோத்தா இஸ்கண்டாரில் அரங்கண்ணல் களமிறக்கப்படுவார் என்று பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் தெரிவித்தார்.
“இது ஒரு வரலாற்றுப்பூர்வமான தருணம். ஜொகூர் மாநிலத்தில், பிஎஸ்எம் போட்டியிடுவது இதுவே முதல் முறை, அதுவும் தனது சொந்த சின்னத்தைப் பயன்படுத்தி களமிறங்கவுள்ளது. வெற்றி பெறுவது நிச்சயம் சவால் மிக்க ஒன்றாக இருக்கும்.
“ஏறத்தாழ 15 ஆண்டுகள், ஜொகூரில் நாங்கள் மக்கள் சேவையில் இணைந்திருந்தாலும், ஜொகூர் பி.ஆர்.என். எங்களுக்கு ஒரு சோதனை களமாகவே அமைந்திருக்கும்.
“நெரிசல் மிகுந்த ஜொகூர் மாநிலத் தேர்தல் களத்தில், பிஎஸ்எம் தனது கொள்கை ரீதியான அரசியலையும் மக்களின் குரலையும் முன்னிறுத்தும்,” என்று கங்கார் பூலாயில் நடைபெற்ற வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் அருட்செல்வன் கூறினார்.
‘ஆரா’ என்றழைக்கப்படும் அரங்கண்ணலை, சமூகப் பின்னணியிலான திரைப்பட இயக்குநராகவும், தனது படைப்புக்காக வெளிநாடுகளில் விருதுகள் பெற்ற ஒருவர் என்றும் அருள் அறிமுகம் செய்தார்.
அதுமட்டுமின்றி, கோத்தா இஸ்கண்டார் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரங்கண்ணல் சேவையாற்றி வருவதாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையில், செல்வந்தர்களுக்கே பெரும்பாலும் முன்னேற்றங்களை வாரி வழங்கும் ஏனைய “உயரடுக்குக் கட்சிகள்” போல் அல்லாமல், சாதாரண மக்களுக்காக குரல் கொடுக்கும் சித்தாந்தத்தைப் பி.எஸ்.எம். தொடர்ந்து பேணி வரும் என்றும் அருட்செல்வன் கூறினார்.
“ஜொகூரில் நாம் காண்பது சிங்கப்பூர் சார்ந்த வளர்ச்சிகள்.
“இந்த வளர்ச்சிகள் அனைத்தும் சிங்கப்பூரின் நலனைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இதன் காரணமாகவே, ஜொகூரில் அடிப்படைப் பொருட்களின் விலை உயர்கிறது, வேலை வாய்ப்புகள் உள்ளூர் மக்களுக்கு பொருந்தாத ஒன்றாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
“பி.எஸ்.எம். வெற்றி பெற்றால், குறைந்த வருமானம் பெரும் மக்கள் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் நிச்சயம் கடுமையாக உழைப்போம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.