ஜொகூர் பி.ஆர்.என்.: கோத்தா இஸ்கண்டார் சட்டமன்றத் தொகுதியில் பி.எஸ்.எம். போட்டி

2022 ஜொகூர் மாநிலத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கோத்தா இஸ்கண்டார் (N 49) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ஆ சிவராஜன் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஜொகூர் மாநில அரசியல் களம் பி.எஸ்.எம். கட்சிக்குப் புதிய ஒன்றல்ல எனவும், சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, கட்சியின் செயற்பாட்டாளர்கள் அங்குப் பல்வேறு நிலைகளில் மக்கள் பணிகளை முன்னெடுத்து வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2009-ம் ஆண்டு, ஜொகூரில் அமைக்கப்பட்ட பி.எஸ்.எம். கட்சியின் முதல் கிளையான நூசா ஜெயா கிளை (நடப்பில் கோத்தா இஸ்கண்டார்) வாயிலாக, பி.எஸ்.எம். கட்சி மக்கள் சேவையில் நேரடியாக ஈடுபட்டு வருகிறது என்றார் அவர்.

“குறைந்தபட்ச ஊதியம், தொழிலாளர் காப்புறுதி திட்டம், கோத்தா இஸ்கண்டாரில் புதியப் பள்ளிக்கூடம், ஜிஎஸ்டி எதிர்ப்பு, பூர்வக்குடி மக்களுக்கான வாழ்வாதார உரிமை, ஜொகூர் மக்களுக்கான வாங்கும் சக்திகுட்பட்ட வீட்டுரிமை திட்டம் போன்ற பல்வேறு பிரச்சார இயக்கங்களுடன், ஸ்கூடாய், தாமான் யூனிவர்சிட்டி பொது மருத்துமனையில் 24 மணிநேர ஆம்புலன்ஸ் சேவை கோரிக்கை உட்பட பல்வேறு போராட்டங்களையும் ஜொகூர் பி.எஸ்.எம். முன்னெடுத்துள்ளது,” என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘மக்களுக்குச் சேவையாற்றிய தொகுதிகளில் மட்டுமே எங்கள் வேட்பாளர்களைக் களமிறக்குவோம்’ என்ற பி.எஸ்.எம்.-இன் கொள்கைக்கு ஏற்ப, இம்முறை ஜொகூர் மாநிலத் தேர்தலில், N49 கோத்தா இஸ்கண்டார் தொகுதியில் அதன் வேட்பாளரை நிறுத்த கட்சி முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜொகூர், கோத்தா இஸ்கண்டாரில், பி.எஸ்.எம். அறிமுகம் செய்துள்ள வேட்பாளர் அரங்கண்ணல் இராஜூ, திரைப்படத் துறையில் ஈடுபாடு கொண்டவர் எனவும் தனது படைப்புக்காக தேசிய நிலையில் விருதுகளைப் பெற்றவர் என்றும் சிவராஜன் கூறினார்.

“ஜொகூர் மாநிலத் தேர்தலில் நாங்கள் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டாலும், இம்முறை தேர்தல் களத்தில் இறங்கியுள்ள மற்ற கட்சிகளோடு ஒப்பிடுகையில் எங்களின் அரசியல் அணுகுமுறையும் செயல்பாடும் அவர்களிடமிருந்து நிச்சயம் வேறுபட்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

“அனைத்து கட்சிகளும், அது ஆளும் கட்சியோ அல்லது எதிர்கட்சியோ, அவர்கள் சாமானிய மக்களின் பார்வையில் இருந்து போராட்டத்தை அணுகவில்லை.”

“எனவே, அவர்களின் பெரும்பாலான கொள்கை திட்டங்களும் சீர்திருத்த செயல்பாடுகளும் மேல்தட்டு மக்கள், முதலாளி வர்க்கம் மற்றும் பெருநிறுவனங்களின் நலன் சார்ந்தே அமைந்திருக்கும். ஆட்சி அதிகாரத்திலிருக்கும் போது அவர்கள் பெறும் அரசியல் மானியம் தொடங்கி, கொண்டுவரும் கொள்கைகள் வரையில் அனைத்தும் பெரும்பாலும் செல்வச் செழிப்பில் புரண்டு கிடக்கும், அரசியல் செல்வாக்கு மிகுந்த மேல்தட்டு மக்களையே சார்ந்திருக்கும்.”

“இத்தகைய போக்கு நிறுத்தப்பட வேண்டும். மேல்தட்டு அரசியல் பாணியைப் பார்த்து – பார்த்து மக்கள் சலிப்படைந்து விட்டனர். இந்நிலையில் தான் பி.எஸ்.எம். மலேசிய அரசியல் சூழலில் மாற்று சிந்தனை அரசியலை உயிர்ப்பிக்க முனைந்துள்ளது. முற்போக்கான மற்றும் மக்களை மையமாக கொண்ட மாற்று அரசியலை வழங்க பி.எஸ்.எம். தயாராக உள்ளது.” என்றார் அவர்.

உண்மையான மாற்றத்தையும், மக்களை முன்னிறுத்தி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் கோத்தா இஸ்கண்டார் மக்கள் விரும்பினால், இம்முறை பி.எஸ்.எம். கட்சிக்கு வாய்ப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.