கி.சீலதாஸ் – நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒரு அரசியல் கட்சி பெற்றுவிட்டால் அது எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், ஏற்படுவதற்குப் பயன்படுத்தப்படும் என்பதை மதமாற்ற வழக்குகளில் சிக்கித் தவிக்கும் இந்திரா காந்தி போன்ற தாய்மார்களின் அவலநிலையை மறக்க முடியவில்லையே.
இந்த நிலை மறுபடியும் தலைதூக்கக்கூடாது என்பதில் மலேசிய மக்கள் கவனத்தைச் செலுத்தும்போது, இன்றைய நடுவண் ஆட்சியில் பங்குபெறும் இஸ்லாமிய கட்சியான பாஸ் அரசமைப்புச் சட்டத்தையே திருத்தி ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைச் சட்டமாக்க நினைக்கிறது. அதன் நோக்கத்தைப் பட்டவர்த்தனமாக்கிவிட்ட பிறகு, மலேசியர்களே அந்த நோக்கத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொள்ளலாமா? அவ்வாறு நடந்து கொண்டால் ஆபத்து என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
துன் டாக்டர் மகாதீர் முகம்மது பிரதமராக இருந்த காலத்தில்தான் அரசமைப்புச் சட்டத்தின் 121ஆம் பிரிவில் திருத்தம் காணப்பெற்றது. நீதிமன்றத்தில் குடியிருந்த அரசியல் அதிகாரம் நீக்கப்பட்டு இஸ்லாமிய விவகாரங்களில் சமயச் சார்பற்ற நீதிமன்றம் தலையிடக்கூடாது என்பதை நிலை நிறுத்தியது. இந்தத் திருத்தம் முஸ்லிம் அல்லாதாரைப் பாதிக்காது என்றார் மகாதீர். ஆனால் நடந்தது என்ன?
முஸ்லிம் அல்லாத பெற்றோர்கள் பாதிப்படைந்தனர், அவலநிலைக்கு உட்படுத்தப்பட்டனர். இன்றளவும் அச்சம் நீங்காத நிலை. இதற்குக் காரணம் யார்? சுமார் இருபத்திரண்டு ஆண்டுகள் பிரதமராக இருந்த மகாதீரும், தேசிய முன்னணியில் தலைமை ஏற்ற அம்னோதான் காரணம். இந்த ஆபத்தான நிலை நீடிக்கக்கூடாது.
மலேசியர்கள், அதிலும் குறிப்பாக சிறுபான்மையினர் மேலும் துன்பத்துக்கும், வேதனைக்கும் ஆளாக்கப்படக்கூடாது என்பதை நினைவூட்டவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை சதவிதம் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல எந்த ஒரு மாநிலச் சட்டமன்றத்திலும், தனி கட்சிக்கோ, கூட்டணிக்கோ கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
இப்படிப்பட்ட குழப்ப நிலை நீடிக்கும்போது ஜொகூர் மாநிலத் தேர்தல் தேவைதானா என்ற கேள்விக்குச் சரியான, அறிவுடைய பதிலைத் தராமல் தட்டிக்கழிப்பதையும் ஜொகூர் மக்கள் அறியாதது அல்ல. மாநிலத்தில் உறுதியான ஆட்சி தேவை என்ற காரணம் சொல்லப்படுவதைக் கவனிக்க வேண்டும். மாநில நிர்வாகத்தைத் தன் வசம் வைத்திருந்த கட்சி இருபத்தெட்டு இடங்களும், எதிர்க்கட்சிக்குப் இருபத்தேழு இடங்களும் இருந்தன.
அவைத்தலைவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் ஆட்சியில் இருந்த சிறுபான்மை கட்சிக்கு எவ்வித தொல்லையும் தரவில்லை. எனவே, மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பானேன்? அம்னோவில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள், பதவிக்கான போராட்டம், அதோடு அம்னோ பெரும்புள்ளிகளுக்கு எதிரான நீதிமன்றங்களில் வழக்குக் குவிப்பு போன்றவற்றிற்குத் தீர்வு காணும் பொருட்டே இந்த மாநிலத் தேர்தல் என்று சொல்லப்படுவதை மக்கள் கவனிக்க வேண்டும். இந்த அப்பட்டமான அரசியல் சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படும்போது அம்னோவில் ஒரு காலத்தில் – சமீப காலம் வரை நெருங்கிய தோழர்களாக இருந்த டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக், டான் ஶ்ரீ முகைதீன் யாசின் இன்று பரம எதிரிகளாக மாறிவிட்டனர்.
இந்தக் காலகட்டத்தில் சீனத் தாய்மொழி பள்ளிக்கூடங்களுக்கு ஆதரவு தர மறுத்தவர் கல்வி அமைச்சராக இருந்த முகைதீன் எனக் குற்றம் சாட்டுகிறார் நஜீப். அப்போது தாம் பிரதமராக இருந்த வேளையில் தாம் தான் சீனப் பள்ளிக்கு அனுமதி அளித்தாராம். இந்தத் தகவலை இப்பொழுது வெளியிடுவது வேறு யாரும் அல்ல! நஜீப் தான்! சீனப் பள்ளிக்கு ஆதரவு என்றால் தாய்மொழிப் பள்ளிக்கு ஆதரவு என்றுதான் முடிவு கொள்ள வேண்டி இருக்கிறது.
ஆனால், நடைமுறையில் என்ன நடக்கிறது? அம்னோ ஆதரவு இயக்கங்கள் தானே தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் அழிக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றனர். இந்த நிலையை எப்படி விளக்குவது? குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கபட நாடகம் என்று நம்மால் கிரகிக்க முடியாதா என்ன?
மேலே குறிப்பிட்டிருப்பது போல் இந்த ஜொகூர் மாநிலத் தேர்தல் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டிருக்கவில்லை. மாநில முன்னேற்றத்துக்கும், வளத்துக்கும் உதவ அல்ல, மாநிலத்தில் உறுதியான ஆட்சியைத் தரவல்ல, மாறாக சுயநல அரசியல்வாதிகள் மேற்கொண்டிருக்கும் மோசடி அரசியல் நாடகம் என்று சொல்லப்படுகிறது. தேசிய முன்னணி ஜொகூரில் வெற்றி காணுமானால் மற்ற சில மாநிலங்களிலும் ஆட்சி கவிழ்ப்பு, ஆட்சி கலைப்பு ஏற்படுத்தி ஆட்சி மாற்றம் கொணர்ந்து அதே திட்டத்தை நாடாளுமன்ற கலைப்புக்கும் பயன்படுத்தலாம்.
இப்படிப்பட்ட நடவடிக்கைகள் யாவும் அரசியலில் ஆதாயம் காண விழையும் சந்தர்ப்பவாதிகளின் கொடுமையான நடவடிக்கைகளாகும். இதற்கு மக்கள் இடமளிக்கக்கூடாது. குறிப்பாக, இந்தக் காலகட்டத்தில் ஜொகூர் வாக்காளர்கள் இடமளிக்கக்கூடாது என்ற கருத்து பலம் பெறுகிறது.
ஜொகூர் மக்கள் ஊழல்வாதிகளை ஆதரிக்கிறார்கள். நீதி தேவதையின் முன் குற்றம் சுமந்து நிற்பவர்களை மன்னிக்க தயாராக இருக்கிறார்கள், மன்னித்துவிட்டார்கள் என்ற நிலை ஒருபோதும் ஏற்படக்கூடாது. அப்படிப்பட்ட தவறான எண்ணம் உருவாகுவதைத் தவிர்க்கும் பொறுப்பு ஜொகூர் மக்களுக்கு உண்டு.
இங்கே அரசியல் நிகழ்வு ஒன்றை நினைவுகூர்வது பொருத்தமாகும். இரண்டாம் உலகப்போர் முடிந்துவிட்டது. பிரிட்டிஷார் மலாயாவுக்குத் திரும்பிவிட்டார்கள். மலாயாவுக்குத் திரும்பிய பிரிட்டிஷார் ஓர் ஐக்கிய மலாயாவை அமைக்க முற்பட்டது. அந்தத் திட்டம்தான் மலாயன் யூனியன் அமைப்பு. மலாயா மாநிலங்களின் சுல்தான்களும், மன்னர்களும் மலாயன் யூனியன் அமைப்பை ஏற்றுக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
அன்றைய ஜொகூர் சமஸ்தானதிபதி சுல்தான் இபுராஹிம் மலாயன் யூனியன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட போதிலும் அதை எதிர்க்கும் நடவடிக்கையில் இறங்கினார். அவருடைய மலாயன் யூனியன் எதிர்ப்புக்கு வடிவம் தந்து ஓர் இயக்கத்தைத் தொடங்கினார் டத்தோ ஓன் ஜஃபார். ஜொகூரில், ஜொகூர் அரண்மனையில் பிறந்த இயக்கம்தான் அம்னோ. ஐக்கிய தேசிய மலாய் இயக்கம்.
அது துரிதமாக மற்ற மாநிலங்களில் பரவியது. இறுதியில் மலாயன் யூனியன் கைவிடப்பட்டு மலாயா கூட்டரசு 1948ஆம் ஆண்டு பிறந்தது. இங்கே கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா? பிரிட்டிஷாரின் திட்டத்தை மலாய்க்காரர்கள் மட்டும் எதிர்க்கவில்லை; அன்றைய மஇகா இயக்கமும் எதிர்த்தது. மலாயன் யூனியனை ஆதரித்த இயக்கங்களில் இடதுசாரி மலாய் இயக்கங்களும் அடங்கும். இவை நாளாவட்டத்தில் அரசியல் சூழ்நிலையின் காரணமாக மனம் மாறின. எனவே, மலாயன் யூனியன் அமைந்ததை எதிர்க்கும் இயக்கம் ஜொகூரில் பிறந்தது. அது நாடெங்கும் பரவி நாட்டு அரசியலில் மாற்றத்தைக் காண விழுமியது; வெற்றி கண்டது.
இன்று மலேசியா இக்கட்டான அரசியலில் சிக்கித் தவிக்கிறது. 1946ஆம் ஆண்டு எவ்வாறு ஜொகூர் பிரிட்டிஷ் சாம்பிராஜியத்தை எதிர்த்ததோ அதுபோலவே பயங்கர ஊழல்வாதிகள் மற்றும் பயங்கரமான குற்றங்களைச் செய்ய தயங்காதவர்கள் மக்களை எப்பொழுதும் குழப்பத்தில் ஆழ்த்தலாம், வைத்திருக்கலாம், ஏமாற்றலாம் என்று நினைக்கும் சந்தர்ப்பவாதிகளை அடையாளம் கண்டு, அவர்களின் அபிலாஷைகளுக்கு இடம் தர மறுக்கும் இயக்கத்துக்கு வித்திடும் மாநிலமாக ஜொகூர் செயல்படுவது இன்றியமையாததாகும். இரண்டாவது முறையாக வரலாற்று பெருமையை ஜொகூர் பெற வேண்டும்.
12.03.2022ஆம் தேதி ஜொகூர் வாக்காளர்கள் அந்தப் பெருமையை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்க செய்ய வேண்டும். அதாவது ஊழல்வாதிகளுக்கும், நாட்டின் வளத்தைத் திருடியவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும் இந்த மலேசியாவில் இடம் இல்லை! அப்படிப்பட்டவர்கள் அரசியலில் இருந்தே ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.
எனவே, மலேசியாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பது ஜொகூரின் கையில்தான் இருக்கிறது. ஊழலற்ற ஆட்சி எல்லா இனத்தவர்களையும், தங்களின் மொழிகளையும், கலாச்சாரத்தையும் காக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்காகவே ஜொகூர் வாக்காளர்கள் பெரும் வாரியாக வாக்களிக்க வேண்டும். மலேசியாவின் தர்மம் மிகுந்த எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும்.