ஜொகூர் பி.ஆர்.என். | நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றுவதுடன், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை, ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.) தங்களைப் போட்டியிடத் தூண்டியதாக இரண்டு கலைஞர்கள் கூறியுள்ளனர்.
மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) ஒரே வேட்பாளரான அரங்கண்ணல் இராஜூ, 46, ஒரு திரைப்பட இயக்குநர்; அதேவேளை, மூடா கட்சியின் வேட்பாளர் அஸ்ருல் ரஹானி, 41, கிராஃபிக் மற்றும் அனிமேஷன் வடிவமைப்பாளர் ஆவார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மையின்மை இவர்கள் இருவரையும் சமூக ஆர்வலர்களாக மாற்றியது என இருவரும் தெரிவித்தனர்.
கோத்தா இஸ்கண்டார் சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிடும் அரங்கண்ணல், 1998-இல், இரண்டு பெரிய அரசியல் பிரமுகர்களுக்கு இடையே நடந்த வரலாற்று நிகழ்வுதான் அரசியல் அரங்கிற்குள் தான் நுழைய முக்கியக் காரணியாக இருந்தது என்று கூறினார்.
“நாட்டின் முடிவற்ற அரசியல் பிரச்சினைக்கு யார் தீர்வைக் கண்டுபிடிப்பார்கள் என நாங்கள் (மக்கள்) எதிர்பார்த்திருந்த வேளையில், கோவிட்-19 பெருந்தொற்று சூழலை இன்னும் மோசமாக்கியது. அதுவே, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் எழுப்பி, என்னை அரசியலுக்கு வரச் செய்தது.
“அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண, என்னால் இயன்ற ஆலோசனைகளை வழங்க நான் விரும்புகிறேன். அரசியல்வாதிகள் விளையாடுவதைக் கண்டு சமூகம் சோர்ந்து போயிருக்கிறது. மக்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதால், இந்தப் பிரச்சனைகள் தொடருவதைப் பி.எஸ்.எம். விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.
புக்கிட் பெர்மாய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அஸ்ரூல், ஒரு சமூக, சுற்றுச்சூழல் ஆர்வலராக மட்டும் தான் செயல்பட்டால், அரசியல் நிலப்பரப்பில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று உணர்ந்ததால், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாகக் கூறினார்.
“நான் ஒரு செயல்பாட்டாளராக மட்டுமே செயல்பட்டால், ஓர் அரசியல் கட்சிக்கு வெளியே இருந்தால், அரசியல் சூழலை மாற்ற முடியாது. தற்போதுள்ள அரசியல் கொள்கையைப் புதுப்பிக்க வேண்டுமானால், அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என நான் நினைக்கிறேன்,” என 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பாட்டாளராக இருக்கும் அஸ்ரூல் சொன்னார்.
தான் போட்டியிடும் பகுதியில், வாக்காளர்களின் ஆணையைப் பெற்றால், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, குறிப்பாக உள்ளூர் மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பி.எஸ்.எம்.-இன் போராட்டத்திற்கு ஏற்ப, உயர்ந்து வரும் அன்றாட வாழ்க்கைச் செலவினப் பிரச்சினையைத் தீர்க்கவும், தொற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கோத்தா இஸ்கண்டார் குடியிருப்பாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளைத் தான் உருவாக்க விரும்புவதாகவும் அரா சொன்னார்.
புக்கிட் பெர்மாய் தொகுதியில் உள்ள சமூகத்திற்கு அரசியல் சேவைகளை வழங்குவது தவிர, ஃபெல்டா குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க அஸ்ரோல் உறுதிபூண்டுள்ளார். மேலும், ஃபெல்டா பகுதியில் உள்ள தரிசு நிலங்களில், ‘நவீன விவசாயம்’ முறைகளைக் கொண்டு வர விரும்புவதாகவும் சொன்னர்.
கோத்தா இஸ்கண்டார் தொகுதியில் ஐம்முனை போட்டி நிலவுகிறது. பி.எஸ்.எம். வேட்பாளர் அரா’வுடன், பக்காத்தான் ஹராப்பான் சுல்கில்ஃபி அஹ்மத், தேசிய முன்னணி வேட்பாளர் பாண்டா அஹ்மாட், தேசியக் கூட்டணி வேட்பாளர் சம்சுடின் இஸ்மாயில் மற்றும் பெஜுவாங் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஜைனி அபு பக்கார் ஆகியோர் களத்தில் இறங்கியுள்ளனர்
புக்கிட் பெர்மாய் மாநிலத் தொகுதியில், அஸ்ரோல் நான்கு முனைப் போட்டியைச் சந்திக்கிறார். தேசிய முன்னணி சார்பில் முகமட் ஜஃப்னி ஷுகோர், தேசியக் கூட்டணி சார்பில் தோஸ்ரின் ஜர்வந்தி மற்றும் பெஜுவாங் சார்பில் மொக்தார் அப்துல் வஹாப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்தச் சனிக்கிழமை, 15-வது ஜொகூர் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது.
- பெர்னாமா