2009ம் ஆண்டு 150 பில்லியன் ரிங்கிட் கள்ளத்தனமாக நாட்டிலிருந்து வெளியேறியது

2009ம் ஆண்டு நாட்டிலிருந்து 150 பில்லியன் ரிங்கிட் (47 பில்லியன் அமெரிக்க டாலர்) சட்டவிரோதப் பணம் வெளியேறியுள்ளது. இதனால் சட்டவிரோதமாக அதிக அளவு மூலதனம் வெளியேறியுள்ள தலையாய நான்கு நாடுகளில் மலேசியாவும் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே 2000-2008ம் ஆண்டு (9 ஆண்டுகள்) கால கட்டத்தில் 927 பில்லியன் ரிங்கிட் (291 பில்லியன் அமெரிக்க டாலர்) நாட்டிலிருந்து வெளியேறியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

வாஷிங்டனைத் தலைமையகமாகக் கொண்டுள்ள உலக நிதி நேர்மை என்னும் (ஜிஎப்ஐ) அமைப்பு வெளியிட்ட அண்மைய அறிக்கையில் அந்த விவரங்கள் அடங்கியுள்ளன. அந்த அமைப்பு உலக அளவில் நிதிகள் பரிவர்த்தனையைக் கண்காணித்து வருகிறது.

ஜனவரி மாதம் அந்த அமைப்பு “வளரும் நாடுகளிலிருந்து கள்ளத்தனமாக நிதிகள் வெளியேறுவது” என்னும் தலைப்பில் வெளியிட்ட ஒர் அறிக்கை பலரை அதிர்ச்சி அடையச் செய்தது. அது வெளியிட்ட பட்டியலில் மலேசியா ஐந்தாவது பட்டியலில் இருந்தது.

ஜிஎப்ஐ அமைப்பின் அண்மைய அறிக்கை 2009ம் ஆண்டு முடிந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1077  பில்லியன் ரிங்கிட் (338 பில்லியன் டாலர்) கள்ளத்தனமாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது எனக் குறிப்பிட்டது. அண்மைய பட்டியலிலும் மலேசியா தொடர்ந்து ஐந்தாம் இடத்தில் இருந்தது.

அந்தப் பட்டியலில் முதல் நான்கு நாடுகளிலும் எந்த மாற்றமும் இல்லை- சீனா 2500 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புடன் முதல் இடத்தில் இருந்தது. அடுத்தது மெக்சிக்கோவாகும். அதன் இழப்பு 453 பில்லியன் டாலர், ரஷ்யா (427 பில்லியன் டாலர்), சவூதி அரேபியா (366 பில்லியன் டாலர்).

‘2009ம் ஆண்டு முடிந்த தசாப்தத்தில் வளரும் நாடுகளிலிருந்து கள்ளத்தனமாக வெளியேறிய பணம்” என்னும் தலைப்பைக் கொண்ட ஜிஎப்ஐ அறிக்கையை பொருளியல் வல்லுநர்களான சாரா பிரய்டாஸ், டேவ் கார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஊழல், திருட்டு, வரி ஏய்ப்பு

அனைத்துலகப் பண நிறுவனம், உலக வங்கி ஆகியவற்றுக்கு உறுப்பு நாடுகள் தெரிவித்த வெளிவாணிகப் பற்று வரவு, இருவழி வாணிகம், அந்நியக் கடன் விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த மதிப்பீடுகள் செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர்.

“வெளிவாணிகப் பற்று வரவின் மூலம் வெளியாகும் பதிவு செய்யப்படாத மூலதனக் கசிவுகள், ஊழல், திருட்டு, வரி ஏய்ப்பு, கையூட்டு ஆகிய வருமானம் கள்ளதனமாக மாற்றப்படுவதைக் குறிக்கிறது,” என அந்த அறிக்கை கூறியது.

உலக அளவில் கள்ளத்தனமாக வெளியேறும் நிதிகளில் பாதி (45 விழுக்காடு) ஆசிய நாடுகளைச் சார்ந்தவை. அதில் சீனாவும் மலேசியாவும் முக்கிய இடத்தில் உள்ளன.

என்றாலும் 2009ம் ஆண்டு கள்ளத்தனமாக வெளியே கொண்டு செல்லப்பட்ட மூலதன அளவு மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் குறைந்துள்ளது. அதற்கு உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியே காரணமாக இருக்க வேண்டும். அந்த நாடுகளில் ஆளுமையில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் பொருளாதார சீர்திருத்தங்களும் காரணமாக இருக்க முடியாது.

வளரும் நாடுகளும் வளர்ச்சி அடைந்த நாடுகளும் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடும் வேளையில் கள்ளத்தனமாக இவ்வளவு பெருந்தொகை வெளியேறுவது அதிர்ச்சி அளிப்பதாக ஜிஎப்ஐ இயக்குநர் ரேமண்ட் பேக்கர் கூறினார்.

“பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய அந்த நிலையை சமாளிப்பதற்கு உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”