சிலம்பத்திற்கு நேர்ந்த அவலம்: யார்தான் இதற்குக் காரணம்?

இராகவன் கருப்பையா – அடுத்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும். ‘சுக்மா’ எனப்படும் மலேசிய விளையாட்டுகளில் நமது பாரம்பரிய விளையாட்டான ‘சிலம்பம்’ இடம்பெறாது என்பது நம் சமூகத்திற்கு வேதனையளிக்கிறது.

ஆனால் இதற்கு யார் காரணம், ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை கண்டறியாமல், நம் சமூகத்தைச் சார்ந்த பலர் பிரதமர் அன்வார் உள்பட பல்வேறுத் தரப்பினரை சகட்டு மேனிக்கும் விளாசுவது அதைவிட வேதனை.

கடந்த சில தினங்களாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும்தான் இந்தக் கூத்து உணர்ச்சி பொங்க தலைவிரித்தாடுகிறது.

எந்தெந்த விளையாட்டுகளை சேர்த்துக் கொள்வது, எவற்றை நீக்குவது போன்ற முடிவுகளை, அப்போட்டிகளை ஏற்று நடத்தும் மாநிலம்தான் முடிவு செய்யும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.

நம் சமூகத்தின் ஆதங்கத்தை உணர்ந்த அவர், இதனை இன ரீதியாகப் பார்க்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தது நியாயமான ஒன்றுதான்.

இருந்த போதிலும், இம்முறை 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் தலைமையில் நடந்த ‘சுக்மா’ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என அவரே செய்த அறிவிப்பு நமக்கு சற்று குழப்பமாக உள்ளது.

ஒரு விளையாட்டை புதிதாக சேர்ப்பதற்கு முடிவெடுக்கும் இக்குழு சிலம்பம் நீக்கப்படுவதை ஏன் தடுக்கவில்லை எனும் கேள்வி எழுவதிலும் நியாயம் உள்ளது.

ஆக, ‘தீர்ப்பை மாற்றி எழுத’ தன்னிடம் அதிகாரம் இருக்கிற போதிலும் இவ்விவகாரத்தில் இருந்து ஏன் அவர் நழுவ முனைகிறார் என்றுதான் நமக்கு புரியவில்லை.

இதற்கிடையே இந்த அதிரடி முடிவுக்குப் பின்னணியில் தேசிய விளையாட்டு மன்றம் உள்ளது எனும் விவரம் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மலேசிய சிலம்பக் கழகம் அண்மைய காலமாக தலைமைத்துவ போராட்டத்தில் சிக்கி, திக்கற்ற நிலையில் உழன்றுக் கொண்டிருக்கிறது.

அதன் உள்பூசலுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என அக்கழகத்தின் தோற்றுனர்களில் ஒருவரும் அதன் தொடக்ககால தலைமைச் செயலாளருமான மாசிலாமணி கூறினார்.

அது மட்டுமின்றி அக்கழகம் எம்.ஏ.சி.சி. எனும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைப் பட்டியலில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய விளையாட்டு மன்றம் செய்த முடிவுக்கு இத்தகைய குளறுபடிகள்தான் காரணம் என்று விவரித்த அவர், அக்கழகம்தான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

நம் சமூகத்தைப் பீடித்திருக்கும் ‘ஒற்றுமையின்மை எனும் கடுமையான நோய்’தான் இத்தகைய அவலங்களுக்கு வித்திடுகின்றது என மாஜு ஜெயா கூட்டுறவுக் கழகத்தின் முன்னாள் தலைவருமான மாசிலாமணி கூறினார்.

எது எப்படியாயினும் தேசிய விளையாட்டு மன்றம், ‘சுக்மா’ உச்சமன்றம் போன்ற எல்லா அமைப்புகளுமே ஹன்னாவின் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ்தான் உள்ளன.

தற்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நம் சமூகத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஹன்னாவை சந்திப்பதில் பிரச்சனைகள் இருக்காது.

அவரை அணுகி நம் சமூதாயத்தின் ஆதங்கத்தை  எடுத்துரைத்தால் அநேகமாக ஒரு நொடியில் இதற்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளதையும் நாம் மறுப்பதற்கில்லை.

நம் பிரதிநிதிகள் யாராவது இவ்விவகாரம் குறித்து அவரிடம் பேசினார்களா, பேசியிருந்தால் அவர் என்ன சொன்னார், அல்லது இன்னும் பேசவில்லையா, அப்படியென்றால் எப்போது பேசுவார்கள் போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?