பி.ஆர்.என். ஜொகூர் | ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.), மாநிலத்தின் பெரிய தொகுதிகளில் ஒன்றான N49 கோத்தா இஸ்கண்டாரில், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) முதல் முறையாகப் போட்டியிட்டது. பிஎஸ்எம் வேட்பாளர் அரங்கண்ணல் இராஜு என்ற அரா, தன் வைப்புத் தொகையைத் திரும்பப் பெற முடியாமல் போனாலும், சுமார் ஆயிரம் வாக்குகள் பெற்றார். வெற்றி பெற்ற அனைத்து கட்சியினரையும் வாழ்த்தி, தோல்வியை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆகிய அனைத்தும் ஒவ்வொரு கூட்டணியில் இடம் பெற்றிருந்தன என்பதைப் பி.எஸ்.எம். கவனத்தில் கொள்கிறது. எந்தக் கூட்டணியிலும் இடம் பெறாத பெஜுவாங், வாரிசான், பங்சா மலேசியா கட்சி, புத்ரா மற்றும் பிஎஸ்எம் போன்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தேர்தலில் தோல்வியைத் தழுவியதோடு, வைப்புத் தொகையையும் இழந்தன.
மிகக் குறைந்த வாக்குப்பதிவு என்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. நாடு தொற்றுநோயிலிருந்து மீண்டு வரும் வேளையில், மக்கள் இந்தத் தேர்தலில் உற்சாகம் காட்டாமல் இருந்ததில் தவறில்லை என்று பிஎஸ்எம் கருதுகிறது. சிங்கப்பூரில் இருக்கும் பல வாக்காளர்களால் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்குப்பதிவு அதிகமாக இருந்தால், நிச்சயமாக முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.
ஆனால், பிஎஸ்எம்-க்கு இந்த முடிவு மிகவும் ஊக்கமளிக்கிறது, அதுமட்டுமின்றி எங்கள் முதல் பயணத்தை நாங்கள் வெற்றிகரமாகவும் திருப்திகரமாகவும் தொடங்கியுள்ளதாகக் கருதுகிறோம். வீடு, வேலை, சுற்றுச்சூழல் முதல் அடிப்படை வசதிகள் வரை பொதுநலன் சார்ந்த பல பிரச்சினைகளைக் கட்சி எழுப்பியுள்ளது.
எங்களுடைய அனைத்து சுற்றறிக்கைகளையும் விநியோகிக்க முடிந்ததோடு, கட்சிக்குப் பொதுமக்களிடமிருந்து பெரும் நிதி உதவியும் கிடைத்தது. இது எங்கள் வைப்புத்தொகையை ஈடுகட்டியதோடு, நேர்மையான முறையில் தூய்மையாகப் பிரச்சாரத்தை நடத்த எங்களுக்கு உதவியது. இன, மதக் கூறுகள் இல்லாமல் தூய்மையான, உற்சாகமான பிரச்சாரத்தை மேற்கொண்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
எங்கள் பயணத்தின் இந்தத் தொடக்கம், எதிர்காலத்தில் மற்ற கட்சிகளுடன் உண்மையான கூட்டுறவை உருவாக்கவும், ஜொகூரில் எங்கள் தளத்தை விரிவுபடுத்தவும் எங்களை ஊக்குவிக்கும்.
எங்களிடமிருந்து எந்தவொரு நிதி தூண்டுதலும் இன்றி, எங்கள் தேர்தல் இயந்திரத்தில் கடின உழைப்பை மட்டுமே முன் வைத்து பணியாற்றிய கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளைச் சார்ந்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி.
எங்கள் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையும் கொடுத்த தைரியமும் நாங்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவோம் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.
சோசலிச மாற்று மற்றும் வர்க்க அடிப்படையிலான அரசியலை வழங்கும் ஒரே கட்சியான நாங்கள், தேர்தல்களில் முன்னிலையில் இருப்பது இன்றியமையாதது என்றும், எங்கள் முயற்சிகள் பலனளிக்க நேரம் எடுக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
போராட்டம் தொடரும். போராடுவோம், வெல்வோம்!
எஸ் அருட்செல்வன்
பிஎஸ்எம் தேசியத் தேர்தல் இயக்குநர் & பிஎஸ்எம் துணைத் தலைவர்