பிரதமரைப் பற்றி  அவதூறாக எழுதப்பட்ட கடிதங்களை புறக்கணியுங்கள் – நஸ்ரி

அம்னோ பிரதிநிதிகளிடம், பிரதமரைக் குறிவைத்து எழுதப்பட்ட அவதூறான கடிதங்கள் குறித்து “கவனம் செலுத்த வேண்டாம்” என்று இன்று அம்னோ பொதுச் சபை அரங்கிற்கு வெளியே வந்தவுடன் முன்னாள் சட்ட துறை மந்திரி நஸ்ரி அஜீஸ் தெரிவித்தார்.

இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை “பலவீனமான பிரதமர்” என்று குற்றம் சாட்டிய கடிதங்கள் ஆபத்தானவை ஏனெனில் அம்னோ உறுப்பினர்கள் கட்சியின் துணைத் தலைவரைத் தங்கள் தலைவராக விரும்பவில்லை என்ற அவநம்பிக்கையை ஏற்படுத்த விளையும் என்று அந்த  பாடாங் ரெங்காஸ் எம்.பி கூறினார்.

இந்தக் கடிதங்கள் விநியோகித்தவர்கள் யாராக இருந்தாலும் அது அறிவுக்கு புறம்பானது என்றும், எனவே, இஸ்மாயிலின் குணாதிசயத்தை பழித்துக் கூற முயற்சிப்பதாகவும் ஆகும் என்று அவர் கூறினார்.

“ஒருவர் பலவீனமானவரா அல்லது வலிமையானவரா என்பது மன உணர்வின் விசயம். இதில் அதிக கவனம் செலுத்தக் கூடாது,” என்று அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

“என்னைப் பொறுத்தவரை, இது எதுவாக இருந்தாலும், ஊழல் செய்யாத மற்றும் தூய்மையான ஒருவரை நாங்கள் விரும்புகிறோம்.இதுவரை இஸ்மாயிலின் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை என நான் நம்புகிறேன். இதுவே எங்களுக்கு போதுமானது என்று அவர் கூறினார்.

“இஸ்மாயில் தூய்மையானவர், நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டிய ஒருவர் – அம்னோ உறுப்பினர்கள் மட்டுமல்ல, மக்களும் கூட. எனவே இதைப் பற்றி மட்டுமே நாம் அக்கறை கொள்ள வேண்டும்.”

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தின் நடைபாதையில் நேற்று நண்பகல் வேளையில் இந்த கடிதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்று இஸ்மாயிலை விமர்சித்ததுடன் மற்றும், நாட்டைக் காப்பாற்ற உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கடிதங்கள் கோரியுள்ளன.

ஒரு வலுவான தலைவராக மட்டும் இருப்பதில்  எந்த அர்த்தமும் இல்லை, அதே நேரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்காமல் இருப்பதும் தேவையாகும் என்று  நஸ்ரி கூறினார்.

“சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு அம்னோ மற்றும் இஸ்மாயில் மேல் உள்ள மக்களின் நம்பிக்கையே  காரணம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

பெயர் வெளியிட மறுத்த மற்றொரு அம்னோ தலைவர், இது வெறும் பரப்புரை என்றார். இஸ்மாயிலை பிரதமராக ஆதரிப்பதில் கட்சி உறுப்பினர்கள் தெளிவாக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

சபா அம்னோ இளைஞரணித் தலைவர் அப்துல் அஜிஸ் ஜுல்கர்னைன், அந்த கடிதங்களை தான் பார்க்கவில்லை என்றும், யாரும் அவற்றைப் பற்றிப் பேசவில்லை என்றும் கூறினார்.

“பிரதமர் தற்போது அவரது உரையை ஆற்றி வருகிறார். அம்னோ அவருக்கு பிரதம மந்திரியாகவும், துணை தலைவராகவும் உரிய மரியாதையை அளித்துள்ளது, இந்த அவதூறாக எழுதப்பட்ட கடிதங்களில் குறிப்பிடப்பட்டதைப் போல அல்ல,” என்று கூறினார்.

இதற்கிடையில், அம்னோ துணைத் தலைவர் காலிட் நோர்டினைத் தொடர்பு கொண்டபோது, ​​“நான் அவதூறாக எழுதப்பட்ட கடிதங்களைப் படிப்பதில்லை” என்றார்.

-freemalaysiatoday