பிஎன் கட்டுக்குள் இருக்கும் ஊடகங்கள் கடந்த சில நாட்களில் நாட்டில் வெளியான பல முக்கியமான தகவல்களை குறிப்பாக ஊழல் மீதான செய்திகளை வெளியிடத் தவறி விட்டதாக டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் சாடியுள்ளார்.
ஊழல் குற்றங்களுக்காக சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட வேண்டும் என பல அனைத்துலக அரசு சாரா அமைப்புக்கள் விடுத்துள்ள வேண்டுகோள், 2009ல் 150 பில்லியன் ரிங்கிட் நாட்டிலிருந்து உறிஞ்சப்பட்டதால் கள்ளத்தனமாக மூலதனம் வெளியேறும் நாடுகள் பட்டியலில் மலேசியா ஐந்தாவது இடத்தை வகிப்பது ஆகியவை அந்தத் தகவல்களில் அடங்கும்.
அதன் விளைவாக “பிஎன் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் ஊடகங்கள் இப்போது ‘இருட்டடிப்பு பத்திரிக்கைகளாக’ மாறி விட்டன” என அவர் விடுத்த அறிக்கை கூறியது. ஆனால் அவர் எந்த ஊடகத்தையும் பெயர் குறிப்பிடவில்லை.
புருனோ-மான்செர் நிதி, பசுமை அமைதி நிறுவனம், பெர்ன் என்ற காட்டுவளக் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த 17 அரசு சாரா அமைப்புக்கள் தாயிப் மீதும் அவரது குடும்பம் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்களை கடந்த செவ்வாய்க் கிழமை சுமத்தின.
கள்ளதனமாக மூலதனம் வெளியேறும் நாடுகள் பட்டியலில் மலேசியா ஐந்தாவது இடத்தை வகிப்பதாக ஜிஎப்ஐ என்ற உலக நிதி நேர்மை அமைப்பு வியாழக்கிழமை தகவல் வெளியிட்டது. 2000-2008ம் ஆண்டுகளுக்கான பட்டியலிலும் மலேசியா அதே நிலையில் இருந்தது.
அவ்வாறு கள்ளத்தனமாக வெளியேறிய மூலதனத்தில் ” லஞ்சம், திருட்டு, கையூட்டு, வரி ஏய்ப்பு ஆகியவை வழி பெறப்பட்ட வருமானமும்” அடங்கும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டது.
அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அடைந்த வெற்றியும் முழுமையாக வெளியிடப்படவில்லை என அந்த ஈப்போ தீமோர் எம்பி சொன்னார். அந்தச் செய்தியில் “முக்கியமற்ற ஒரு பத்தி” காணப்படவில்லை.
கடந்த மூன்று நாட்களாக பிஎன் ஊடகங்கள் பாதகமான செய்திகளை அப்பட்டமாக ‘இருட்டடிப்பு’ செய்து வருவதால் ஏற்கனவே மோசமாக இருக்கும் மலேசியாவின் பத்திரிக்கை சுதந்திரக் குறியீடு மேலும் வீழ்ச்சி அடையும்,” என லிம் வருத்தத்துடன் கூறினார்.
நாட்டின் பத்திரிக்கை சுதந்திரக் குறியீடு இவ்வாண்டுக்கு ‘சுதந்திரமாக இல்லை’ என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட “சுதந்திர இல்லம்” என்னும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அது ஆய்வு நடத்திய 196 நாடுகளில் மலேசியா 143வது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் சரிவாகும்.

























